தலைப்பு செய்திகள்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5ல் தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 18ல் தமிழக பட்ஜெட் தாக்கலாகிறதா?
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதில் 15 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் பிப்ரவரி 8-ந்தேதி சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் நடப்பு நிதியாண்டிற்கான ‘பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துறை வாரியாக ஆலோசனை நடத்தி இருந்தார்.
அநேகமாக வருகிற 18-ந்தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது. 19-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 5ம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. மார்ச் 5ல் மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெறக் கூடிய அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.