தலைப்பு செய்திகள்
மெஜாரிட்டி இருந்தும் அதிமுகவிடம் தோற்ற திமுக.

பெரும்பான்மை இருந்த நிலையிலும் கூட இன்று நடந்த மணப்பாறை நகராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுகவிடம் எதிர்பாராமல் தோல்வியுற்றது திமுக.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மணப்பாறை நகராட்சியில் திமுக சார்பில் 8 உறுப்பினர்களும் அதிமுக சார்பில் 11 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காங்கிரஸ் ஒரு இடத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. சுயேச்சைகள் ஐந்து இடங்களில் வெற்றி பெற்று இருந்தனர். சுயேச்சைகள் 5 பேரும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அவர்கள் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து இருந்தனர். ஆக மொத்தம் 16 பேர் இருப்பதால் மணப்பாறை நகராட்சி திமுக கைப்பற்றுவது உறுதி என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில், தி.மு.க சார்பில் தலைவர் வேட்பாளராக கீதா மைக்கேல்ராஜ் அறிவிக்கப்பட்டிருந்தார். இன்று காலை தலைவர் பதவி இடத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. திமுக சார்பில் கீதா மைக்கேல்ராஜ் மனு அளித்தார். அதிமுக சார்பில் பா.சுதா என்பவரும் மனு அளித்தார். இதனால் தேர்தல் நடத்தப்பட்டது. தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று திமுகவினர் பெருமிதத்துடன் இருந்தனர்.
ஆனால் தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வந்தது. மறைமுக வாக்கெடுப்பில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க.வை சேர்ந்த பா.சுதா 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் 12 வாக்குகள் மட்டுமே பெற்றார்.இதனால் தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகள் மட்டுமின்றி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் ஆகியவற்றையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி விட்டோம் என்று வீராப்புடன் இருந்த திருச்சி மாவட்ட திமுகவின் மகிழ்ச்சிக்கு இப்படி ஒரு எதிர்பாராத தோல்வியை தந்து திடீர் தடை போட்டிருக்கிறார் அதிமுகவின் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப. குமார்.
