தலைப்பு செய்திகள்
நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணிவிப்பு.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென் மாவட்டங்களில் நேற்று ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
நெல்லை மாவட்டம் விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

பின்னர் மாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று மூலவர் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். திருச்செந்தூரில் ஒரு விடுதியில் தங்கியிருந்த அவரை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் திருச்செந்தூர் கோவிலில் சசிகலா தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை வந்தார். காலை 8.30 மணிக்கு பாளை வி.எம். சத்திரம் பகுதியில் நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஏராளமான நிர்வாகிகள் அ.தி.மு.க. கொடியுடன் அவரை வரவேற்றனர். சிலர் அ.ம.மு.க. கொடியுடனும் அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து சென்ற சசிகலாவிற்கு வயல்தெரு, பாட்டபத்து விலக்கு, டவுன் காட்சி மண்டபம் உள்ளிட்ட பகுதியில் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.
நிகழ்ச்சிகளின் போது சசிகலாவுடன் இளவரசி, அவருடைய மகன் விவேக் ஆகியோர் உடனிருந்தனர்.
