தலைப்பு செய்திகள்
உக்ரைனில் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக பிரித்தானியாவின் ராணுவ உளவுத்துறை தகவல்.

உக்ரைனில் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக பிரித்தானியாவின் ராணுவ உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது போரை 11வது நாளாக தொடர்ந்து நடத்திவருகிறது.
இந்தநிலையில் உக்ரைனின் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்படுத்த மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மாற்றாக ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்த்து பல்வேறு பொருளாதார தடை, சொத்து முடக்கம் மற்றும் உளவுத்துறையின் தகவல் உதவிகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், உக்ரைனில் போர் தொடுத்துள்ள ரஷ்யா, பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கார்க்கிவ் செர்னிஹிவ் மற்றும் மரியுபோல் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், ஆனால் உக்ரைன் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ரஷ்ய ராணுவத்தின் இந்த திட்டத்தை வலுவிழக்க செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரேனியர்களின் எண்ணிக்கை மற்றும் வலுவான எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவை ரஷ்ய ராணுவத்தை திகைப்படைய செய்து, அவர்களின் முன்னகர்வு மக்களின் ஒற்றுமையால் நிதானமடைய செய்து விட்டதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளில் ராணுவம் தாக்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்திருந்தது.
ஆனால் 1999ல் ரஷ்யா நடத்திய செச்சினியா போர் மற்றும் 2016ல் நடத்திய சிரியா போர் ஆகிய இரண்டிலும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் தரைவழி மற்றும் வான் வழித்தாக்குதலை ரஷ்யா நடத்தியதை குறிப்பிட்டு இந்த தகவலை பிரித்தானியாவின் ராணுவ உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
