தலைப்பு செய்திகள்
தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறி ஜெயலலிதா ஓய்வு எடுக்க மறுத்துவிட்டார்: அப்போலோ மருத்துவர் மனோகர் வாக்குமூலம்.
மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஓய்வெடுக்க ஜெயலலிதா மறுத்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விசாரணையை தொடங்கியது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் முதல் நாள் விசாரணையான இன்று அப்போலோ மருத்துவர்கள் பாபு மனோகர், அருள் செல்வம், ராமகிருஷ்ணன், சுந்தர், காமேஷ் ஆகியோர் ஆஜராகி உள்ளனர்.ஆஜரான மருத்துவர்களிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நிரஞ்சன், ஜபாருல்லா கான் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுத் தரப்பை தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்ய உள்ளார். இந்த நிலையில், அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் விசாரணை ஆணையத்தில் கூறியதாவது,
2016ல் பதவி ஏற்கும் முன்பே ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது.பதவி ஏற்கும் முன்பே ஜெயலலிதாவுக்கு தலைசுற்றல், மயக்கம் இருந்தது. முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு பிறர் உதவு இல்லாமல் நடக்க முடியாத சூழல் இருந்தது.மருத்துவர் சிவக்குமார் அழைப்பின் பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள் போயஸ் இல்லத்திற்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்தேன். பரிசோதனை செய்தேன். சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தேன். சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்க ஜெயலலிதாவுக்கு பரிந்துரைத்தேன்.ஆனால் ஜெயலலிதா ஓய்வுவெடுக்க மறுத்தார். தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறி ஜெயலலிதா ஓய்வு எடுக்க மறுத்துவிட்டார், என்றார்.