தலைப்பு செய்திகள்
சென்னை புறநகரில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிறப்பு குழு ஆய்வு.
திருப்போரூர்: சென்னை புறநகரின் பல்வேறு இடங்களில் நேற்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதிகாரிகள் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், பொன்மார், சேலையூர், வண்டலூர், தாழம்பூர், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், தையூர், கேளம்பாக்கம், ஓஎம்ஆர் சாலை போன்ற இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிர்காலத்தில் இதுபோன்ற மழை, வெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் சிஎம்டிஏ, மாநகராட்சி, வனத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களை இந்த சிறப்பு குழு ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் பல்லாவரம் பெரிய ஏரி, ஜி.எஸ்.டி. சாலை, சேலையூர் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, செம்பாக்கம், ஏரி, நன்மங்கலம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, ராஜகீழ்பாக்கம் ஏரி, மாடம்பாக்கம், ஏரி, ஒட்டியம்பாக்கம் ஏரி ஆகியவற்றை பார்வையிட்டனர்.நேற்று 2வது நாளாக திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தாழம்பூர் ஏரி மற்றும் வெள்ளக் கால்வாய், படூர் மற்றும் புதுப்பாக்கம் ஏரி, கழிப்பட்டூர் ஓடை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சிறப்பு குழுவினர் பார்வையிட்டனர். இந்த ஆய்வுக்கு பிறகு, சென்னை புறநகர் பகுதிகளில் அதிக நீர் தேங்கும் ஏரிகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கால்வாய்கள், சீரமைக்கப்பட வேண்டிய மதகுகள், கலங்கல்கள் போன்றவை குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழக முதல்வரிடம் ஆய்வறிக்கை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வில் செங்கல்பட்டு மாவட்ட திட்ட அலுவலர் செல்வகுமார், திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா ஆகியோர் உடனிருந்தனர்.