தலைப்பு செய்திகள்
இன்று கச்சத்தீவு திருவிழா: தமிழர்கள் 80 பேர் பங்கேற்பு.
இலங்கை அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்திலிருந்து படகுகளில் 80 பக்தர்கள் இன்று செல்கின்றனர்.
ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. கரோனா தொற்று காரணமாக இந்தாண்டு அந்தோணியார் திருவிழாவில் இலங்கை, இந்தியா தரப்பில் இருந்து 100 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு நாட்டுப்படகு மற்றும் 3 விசைப்படகுகளில் பாதிரியார்கள், பக்தர்கள், படகோட்டிகள் உட்பட 80 பேர் இன்று கச்சத்தீவு செல்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 150 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்திய கடலோர காவல்படை, மரைன் காவல்துறையினர், க்யூ பிரிவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் முகக்கவசம் அணிந்து கரோனா விதிமுறைகளை பின்பற்றி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு அந்தோணியார் உருவம் பதித்த கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து சிலுவை பாதை திருப்பலியும் இரவில் அந்தோணியார் தேர் பவனியும் நடைபெறுகிறது.
விழாவின் 2வது நாளான நாளை காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. பின்னர் 9 மணியுடன் திருப்பலி முடிந்து கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறுகிறது. அவர்கள் செல்லும் 3 படகுகளையும் தமிழக மீன்வளத்துறை இணை இயக்குநர் காத்தவராயன் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.