தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு அரசு கல்விக்கட்டணக் கமிட்டியை கலைக்க வேண்டும் : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கம் (TNCAPS) மற்றும் FIND TEACHER POST நிறுவனம் இணைந்து நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் தஞ்சை பாரத் கலை அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பாரத் கல்வி குழுமச் செயலாளர் புனிதா கணேசன் கலந்து கொண்டார். FIND TEACHER POST அமைப்பு நிறுவனர் செல்வகுமார் முகாமை ஒருங்கிணைத்தார்.
வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கம் மாநில துணைத் தலைவர்கள் கவிதா சுப்பிரமணியன், அறிவானந்தம், ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், மாநிலப் பொருளாளர் சிங்கப்பாண்டியன், தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் உதயகுமார், ராமலிங்கம், கதிரவன், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் ஜெரால்டு மற்றும் சேலம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விருதுநகர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

வேலைதேடும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தமிழகம் முழுவதுமுள்ள தனியார் பள்ளிகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர் கூறியதாவது, “இந்த வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை நாடுனர் கலந்து கொண்டனர். இதில் 600 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உடனடியாக தனியார் பள்ளிகளுக்கு என தனி இயக்குனரகம் தொடங்க வேண்டும். பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் உள்ள தடைகளை நீக்கி, அனைத்து பள்ளிகளுக்கும் நிரந்தர 4வகை சான்றுகளை மட்டும் பெற்றுக்கொண்டு, தொடர் அங்கீகாரத்தை நிபந்தனையின்றி, 3 ஆண்டுகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில், தனியார் பள்ளிகள், அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, அரசு ஏற்கனவே நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணத்தை வசூல் செய்ய அனுமதிக்க வேண்டும். சமச்சீர் கல்வித் திட்டம் பின்பற்றப்படும் நிலையில், ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு விதமான கட்டணம் என்பதை தவிர்த்து, கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது போல், ஒரே விதமான கட்டணத்தை நிர்ணயம் செய்து தர வேண்டும்.
உடனடியாக கல்வி கட்டணக் கமிட்டியை கலைத்து விட்டு, ஒரே விதமான கட்டணம் அமல்படுத்தப்பட வேண்டும். அதேபோல் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல், ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு சென்று சேருவதை அனுமதிக்கக்கூடாது. பள்ளி சேர்க்கைக்கு மாற்று சான்றிதழ் அவசியம் என ஏற்கனவே இருந்த நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்” என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
