மாவட்ட செய்திகள்
ஆசிரியருக்கு கத்திக்குத்து காரைக்குடியில் மாணவர் வெறிச்செயல்.
செல்போன் கொண்டு வந்ததால் தாயை அழைத்து கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால் மாணவர் வெறிச்செயல்
காரைக்குடியில் ஆசிரியரை கத்தியால் குத்திய ஐடிஐ மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் அரசு தொழில் பயிற்சி மையம் உள்ளது. இங்கு அனுமந்தகுடியை சேர்ந்த ஜாய்சன் (வயது 19) என்ற மாணவன் இயந்திரவியல் முதலாமாண்டு படித்து வருகிறான். மாணவன் வகுப்புக்கு ஒழுங்காக வருவது இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐ.டி.ஐயில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர் ராஜா ஆனந்த் ( வயது 48) மாணவர் ஜாய்சன் வகுப்பறையில் வைத்திருத்த செல்போனை பறித்து கல்லூரிக்கு கொண்டு வரக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் பறிமுதல் செய்த செல்போனை கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்தார்.
கல்லூரி முதல்வர் மாணவன் ஜாய்சனிடம் பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார் . தந்தை வெளிநாட்டில் வேலை செய்வதால் நேற்றுமுன்தினம் மாணவன் தாயை மட்டும் அழைத்து வந்ததை தொடர்ந்து இதுபோன்ற தவறுகளில் ஈடுபடக்கூடாது என கண்டித்து எழுதி வாங்கி கொண்டு செல்போனை மாணவனின் தாயிடம் ஒப்படைத்தாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த மாணவன் ஜாய்சன் நேற்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாடம் எடுக்க வந்த ஆசிரியர் ராஜ் ஆனந்தை மார்பு , வயிறு கை பகுதியில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த சக மாணவர்கள் ஜாய்சனை பிடித்து சோமநாதபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த ஓவிய ஆசிரியர் ராஜா ஆனந்த் காரைக்குடி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்குப் பின் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.