மாவட்ட செய்திகள்
அண்ணாமலை நாதர் கோயில் நிலத்தை ரியல் எஸ்டேட் செய்ய முயற்சி !

கடையநல்லூரில் பிரசித்தி பெற்ற அண்ணாமலைநாதர் திருகோவிலுக்கு சொந்தமான நஞ்சை நிலங்களில் ரியல் எஸ்டேட் செய்ய அத்துமீறி போடப்பட்ட பாதையை அகற்ற உயர்நீதி மன்ற மதுரை கிளை இந்து சமய அறநிலைய துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் திருக்கோவில் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். திருவண்ணாமலை அண்ணாமலை நாதர் கோவிலின் அம்சமாக விளங்கும் இக்கோவிலுக்கு சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிற்கும் அதிகமான அளவில் சொத்துக்கள் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான விளை நிலங்கள் நகரின் மையப்பகுதியில் உள்ளதால் அதன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் இக்கோவில் சொத்தை முறைகேடான முறையில் கபளீகரம் செய்ய பலர் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவிலுக்கு சொந்தமான நஞ்சை நிலத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பாதை அமைக்க முயற்சி மேற்கொண்டனர். அதாவது கோவில் நிலத்தை ஒட்டியிருக்கும் ஒரு தனியார் இடத்தில் பிளாட் போட சிலர் திட்டமிட்டனர். இந்த இடத்திற்கு செல்லுவதற்கு பாதை அமைக்க அண்ணாமலை நாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான கோவில் நிலம் தேவை பட்டது. இதற்காக பரிவர்த்தனை என்னும் பெயரில் இத்திருக்கோவிலுக்கு சொந்தமான சர்வே எண் 41ல் உள்ள 3800 சதுர அடி நிலத்தை பொது பாதை அமைக்கும் பொருட்டு அனுமதி வேண்டி இந்து சமய அறநிலைய துறைக்கு இக்கோவில் அறங்காவலர் விண்ணப்பம் செய்தார். ஆனால் அதற்கு இந்த கோரிக்கை ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு தனிபட்ட நலன் கருதி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என கடுமையாக கண்டித்து கோரிக்கையை இந்து சமய அறநிலைய துறை நிராகரித்தது.
இந்நிலையில் இந்து சமய அறநிலைய துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட அந்த இடத்தில் அதிகாரபூர்வமற்ற முறையில்,சட்டத்திற்கு புறம்பாக, முறைகேடாக வருவாய் துறையின் துணையோடு வேக, வேகமாக பாதை அமைக்கப்பட்டது. அண்ணாமலை நாதர் கோவில் நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக பாதை அமைக்கப்பட்டு ரியல் எஸ்டேட் தொழில் கொடிக்கட்டி பறந்தது. இது குறித்து கோவில் பக்தர்களும், கோவில் நிலத்தில் விவசாயம் செய்வோரும் இந்து அறநிலைய துறைக்கு புகார் செய்தனர். இதனை தொடர்ந்து இந்த பாதையை ஆகற்ற இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அலுவலர்களோ, கோவில் நிர்வாகிகளோ கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் பாதையை அகற்ற கோரி அப்பகுதி விவசாயிகள் சார்பில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் அளித்த தீர்ப்பின் விபரம் வருமாறு கடையநல்லூர் அண்ணாமலைநாதர் கோவிலுக்கு சொந்தமான கீழக்குளம் புரவு சர்வே எண் 41ல் போடப்பட்ட பாதையை அகற்ற இந்து சமய அறநிலைய துறை ஆணையர் கடந்த 14.07.2019 அன்று சம்பந்தபட்டவர்களுக்கு ஆணை வழங்கியுள்ளார். அதனை அமல் படுத்தாததால் அப்பகுதி விவசாயிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலைய துறை சார்பில் மேற்படி பாதையை அகற்றி கோவில் நிர்வாகத்தை மேற்க்கொள்ள புதிய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே செயல் அலுவலர் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பக்தர்கள் மற்றும் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த வழக்கில் விவசாயிகள் சார்பில் வக்கீல் சிவசுப்பிரமணியனும், இந்த சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வக்கீல் சுப்பராஜும், அண்ணாமலை நாதர் கோவில் நிர்வாக அறங்காவலர் சார்பில் மாதவனும் ஆஜராகினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
