மாவட்ட செய்திகள்
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர், மீன்பிடி வலையை இழுத்தபோது கடலில் தவறி விழுந்து பலியான சம்பவம்.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர், மீன்பிடி வலையை இழுத்தபோது கடலில் தவறி விழுந்து பலியான சம்பவம் குமரி கடலோர கிராம மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டில்பாடு பகுதியைச் சேர்ந்தவர் சேசடிமை. இவரது மகன் அலெக்ஸ் அஜூ(27) இவர் கடியப்பட்டிணத்தைச் சேர்ந்த சூசைநாயகம் என்பவரின் விசைப்படகில் முட்டம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றார். இவர்களின் விசைப்படகு கடலில் 47 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தது. அப்போது கடலில் வீசியிருந்த வலையை மீனை எடுக்கும்நோக்கத்தில் அலெக்ஸ் அஜூ பிடித்து இழுத்தார். அப்போது நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்தார். அந்த விசைப்படகில் 8 வட இந்தியர்கள் உள்பட 11 பேர் குமரிமாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அவர்களில் சிலர் உடனே கடலில் குதித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்தவழியாக வந்த மீனவர்களின் படகுகளும் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அலெக்ஸ் அஜூ தண்ணீருக்குள் முழுதாக மூழ்கிவிட்டார்.
6 மணி நேரத்திற்குப் பின்பு, அந்தப் பகுதியில் சென்ற இன்னொரு மீனவர்கள் வீசிய வலையில் அலெக்ஸ் அஜூவின் உடல் சிக்கியது. அதனைத் தொடர்ந்து அலெக்ஸ் சென்ற விசைப்படகும், அவரது உடல் கிடைத்த மீனவர்களின் விசைப்படகும் உடனடியாக முட்டம் துறைமுகத்திற்கு திரும்பினர். இந்தச் சம்பவம் குறித்து விசைப்படகின் உரிமையாளர் சூசைநாயகம் இன்று மதியம் குளச்சல் கடலோர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அலெக்ஸ் அஜூவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.