மாவட்ட செய்திகள்
தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் எல்லையில் காத்திருக்கின்றனர். அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என கோவில்பட்டியை சேர்ந்த மாணவி திவ்யாபாரதி கோரிக்கை.
தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் எல்லையில் காத்திருக்கின்றனர். அவர்களை அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என கோவில்பட்டியை சேர்ந்த மாணவி திவ்யாபாரதி மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக, அங்குள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, கல்வி பயில சென்ற மாணவர்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, மத்திய அரசு அங்கு சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளது.
உக்ரைனில் சிக்கிய மாணவ, மாணவிகளை, அருகில் உள்ள நாடுகளின் எல்லை பகுதிகளுக்கு வரவழைத்து, அங்கிருந்து விமானம் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வரும் பணியை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும், உக்ரைனில் சிக்கி இருந்த தமிழக மாணவர்களை மீட்கும் வகையில், தமிழக அரசும், மத்திய அரசுடன் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகத்சிங் தெருவை சேர்ந்த செல்வராஜ் – ராணி தம்பதியின் மகன் நவநீதஸ்ரீராம் உக்ரைன் நாட்டில் உள்ள வின்னிட்ஷா தேசிய மருத்துவக் கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே போன்று அதே கல்லூரியில் கோவில்பட்டி ஜோதிநகர் 2வது தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் – பானு தம்பதியின் மகள் ஹரிணி 3ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் – கற்பகவள்ளி தம்பதியின் மகள் திவ்யபாரதி அதே கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்களை போல் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் இந்த கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனர். உக்ரைனில் போர் தொடங்கியது முதல், இவர்கள் தங்களை மீட்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
மாணவர் நவநீத ஸ்ரீராமமுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்து, தைரியாக இருக்க வேண்டும், அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவீர்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கை காரணமாக, கடந்த மாதம் 26-ம் தேதி ஒரு குழுவிற்கு 50 பேர் என்ற அடிப்படையில், பேருந்து மூலமாக புறப்பட்டு, 27-ம் தேதி ருமேனியா நாட்டு எல்லைக்கு வந்துள்ளனர்.
இவர்களில் கோவில்பட்டியை சேர்ந்த மாணவர்கள் ஊருக்கு வந்தனர். அவர்களை பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
மாணவி திவ்யாபாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில்:
உக்ரைன் வின்னிட்ஷா 5-ம் ஆண்டு மருத்துவ படித்து வருகிறேன். அங்கு முதலில் போர் பதற்றம் இல்லை. அதனால் கல்லூரி வகுப்புகள் வழக்கம் போல் நடந்தன. அப்புறம் எல்லையிலும், கிவ், கார்கிவ் ஆகிய இடங்களில் போர் பதற்றம் அதிகமானது. இதனால் எங்களது பயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டோம். அவர்களது அறிவுரைப்படி தான் உக்ரைன் எல்லை வரைக்கு பேருந்தில் வந்தோம். அங்கு தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அங்கு ஏராளமான மாணவர்கள் நின்றிருந்தனர். அவர்களை கொஞ்சமாக பிரித்து அனுப்பி வைத்தனர். நாங்கள் அங்கே 2 நாட்கள் பனியில், சரியான உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். நாங்கள் ரோமேனின் எல்லையை கடந்து வந்தபோது, இந்திய தூதரக அதிகாரிகள் வந்துபோது, எங்களுக்கு தங்குமிடம் வழங்கி பார்த்துக்கொண்டனர். ரோமேனியாவில் இருந்து டெல்லி வருவதற்கு மத்திய அரசும், டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு வருவதற்கு தமிழக அரசு உதவி செய்தன. நாங்கள் கடந்த வாரம் சனிக்கிழமை அங்கிருந்து புறப்பட தயாரானோம்.
போர் பதற்றம் குறைந்து, எங்களை அழைத்தால் அங்கு சென்று படிப்பை நிறைவு செய்ய வேண்டும். போர் குறையாமல் நீடித்தால், இங்குள்ள கல்லூரிகளில் எங்களது படிப்பை தொடர இந்திய அரசு உதவி செய்ய வேண்டும்.
எங்களது பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த 600 பேர் படிக்கின்றனர். அவர்களில் இன்னும் பலர் எல்லையில் காத்திருக்கின்றனர். உக்ரைனில் உள்ளவர்களே நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். எங்களது பேராசிரியர்களிடம் கேட்டபோது, உங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது. ஆனால், எங்களுக்கு இது தான் ஊர். இங்கே தான் இருக்க வேண்டும்.
நான் புறப்பட்டு 9 நாட்களாகி விட்டது. இந்த நாட்களில் எங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பதற்றமடைந்துவிட்டனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் எல்லையில் காத்திருக்கின்றனர். அவர்களை அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும், என்றார் அவர்.