மாவட்ட செய்திகள்
மேற்கூரை இடிந்து விழுந்ததால் நிறைமாத கர்ப்பிணியும், தாயும் உயிரிழப்பு!! தூத்துக்குடியில் சோகம்!!

தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் கர்ப்பிணி மற்றும் அவரது தாயார் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் 3-வது தெருவில் கூலித்தொழிலாளியான முத்துராமன் தனது மனைவி காளியம்மாளுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு காத்தம்மாள் என்ற கார்த்திகா என்ற மகள் உள்ளார்.

கடந்த 10 மாதங்களுக்கு முன் மார்த்தாண்டம்பட்டியை சேர்ந்த செல்வராஜூக்கு மகள் கார்த்திகாவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் கர்ப்பிணி கார்த்திகாவுக்கு வளைகாப்பு நடத்தி, அவரை தாய் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, வீடு திடீரென இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தாய் மற்றும் கர்ப்பிணி மகள் உயிரிழந்தனர். வீட்டின் ஒரு ஓரத்தில் படுத்திருந்த முத்துராமன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வசித்து வந்த வீடு 50 ஆண்டுகள் பழமையானது. கான்கிரீட் வீட்டின் மேற்கூரை பகுதியில் பழைய ஓடுகள் வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஈரநிலையில் ஓடுகள் இருந்த சூழலில் மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
