BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மே 18 முதல் 19000 மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!!

சேலம் மாவட்டம் மேட்டூரில் வருகிற 18ம் தேதி சம்பள உயர்வு கோரி அரசு டாக்டர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளனர். இது குறித்த அறிவிப்பை அரசு டாக்டர்கள் சங்க சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்டார்.இந்த சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் குறித்து அவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 19 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். சம்பள உயர்வு குறித்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இன்றளவும் சம்பளம் உயர்த்தப்படவில்லை.

கொரோனா தொற்றின் 3 அலைகளிலும் ஏழரை கோடி தமிழக மக்களை காப்பாற்ற, டாக்டர்கள் இரவு பகல் பாராமல் ராணுவத்தினருக்கு ஈடாக உழைத்தனர். இருப்பினும் டாக்டர்களின் கோரிக்கையை அரசு இன்றவும் நிறைவேற்றவில்லை.மேலும் கொரோனா முதல் அலையின் போது உயிரிழந்த அரசு டாக்டர் விவேகானந்தன் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது வேதனையளிக்கிறது.

 

எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, அரசு டாக்டர்களின் சம்பள உயர்வை முன்னெடுத்து, தன் உயிரை தியாகம் செய்த, அரசு பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் லட்சுமி நாராயணன் பிறந்த ஊரான சேலம் மாவட்டம், மேட்டூரில் இந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம். அங்கு அரசு டாக்டர்கள் தங்களின் சம்பள உயர்வு கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி வருகிற 18ம் தேதி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளோம். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் அரசு டாக்டர்கள் திரளாக பங்கேற்க உள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக சேலத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அரசு டாக்டர்கள், இந்த சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளும்பட்சத்தில் உள் மற்றும் புறநோயாளிகளின் நிலைமை என்னவாகும் என்பதை கவனித்து அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )