மாவட்ட செய்திகள்
தஞ்சை பெரிய கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான சாலைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு.

தஞ்சை பெரிய கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான சாலைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனுப்ப உள்ளனர். இதற்காக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சாலைகளாக இருந்தால் அது தொடர்புடைய அதிகாரிகளையும் கலந்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உள்ளனர்.

அதன்படி தஞ்சை பெரிய கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் சிரமம் இன்றி செல்லும் வகையில் ரூ.7 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது. குறிப்பாக தஞ்சை கோடியம்மன் கோவில் அருகே உள்ள சுங்கான்திடலில் இருந்து புறவழிச்சாலை வரை உள்ள மாநகராட்சி சாலையும், ஜெபமாலை புரம் போக்குவரத்துக்கழக பணிமனை அருகே 800 மீட்டர் நீளமுள்ள சாலையும் மேம்படுத்தப்படுகிறது.இதனை நெடுஞ்சாலைத்துறை தஞ்சை கோட்ட பொறியாளர் சக்திவேல், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் நேற்று சாலை மேம்படுத்தப்படும் இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சக்திவேல் கூறுகையில், ”மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுற்றுலா தலங்களுக்கு செல்பவர்கள் போக்குவரத்து இடையூறு இல்லாமல் எளிதாக செல்லும் வகையில் சாலைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கிய பின்னர் பணிகள் மேற்கொள்ளப்படும்”என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”
-ளுடன் தொடர்ந்திருங்கள்.
