மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில், புதிய ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்ய வலியுறுத்தி திமுக, அதிமுக உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில், புதிய ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்ய வலியுறுத்தி திமுக, அதிமுக உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி,உள்ளிட்டோர் முன்னிலையில் கூட்டத்தில், மொத்தம் உள்ள 19 உறுப்பினர்களில் திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 17 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் பேசுகையில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான 5.52 சென்ட் நிலம் மந்தித்தோப்பு சாலையில் பாண்டவர்மங்கலம் ஊராட்சி பகுதியில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, அங்கு முதல்வரின் அறிவுரைப்படி காய்கறி சந்தை, ஆட்டுச்சந்தை அமைக்க ஏற்பாடு செய்து, ஊராட்சி ஒன்றியத்துக்கு வருமானம் ஈட்டித்தரும் வகையில் செயல்பட உள்ளது. மீதமுள்ள இடத்தில் செம்மரம், தேக்கு மரங்கள் வைத்து அதனை சுற்றி வேலி அமைத்து அந்த நிலம் பாதுகாக்கப்படும்.

தற்போது ஒப்பந்ததாரர்கள் 56 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கே பணி சரியாக வழங்க முடியவில்லை. தற்போது இன்னும் 10 முதல் 15 பேர் வரை புதிதாக பதிவு செய்ய விண்ணப்பம் வழங்கி உள்ளனர். இவர்களையும் இணைத்தால் 71 பேர் வரை ஒப்பந்ததாரர்கள் எண்ணிக்கை உயர்ந்துவிடும். இவர்கள் அனைவருக்கும் பணி கொடுக்க இயலாது. எனவே, குறைந்தது 6 மாதங்கள் வரை யாரையும் ஒப்பந்ததாரராக பதிவு செய்ய தடை விதிக்க மன்றம் அங்கீகரிக்க வேண்டும், என்றார்.

அப்போது உறுப்பினர்கள் புதிதாக விண்ணப்பத்துள்ளவர்களில் குறிப்பிட்ட 2 பேரின் மனுக்களை ஏற்று, அவர்களை ஒப்பந்ததாரராக பதிவு செய்ய வேண்டும் என்றனர். அதற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மறுக்கவே, திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த 11 பேர் வெளிநடப்பு செய்தனர். மீதமுள்ள 6 பேர் வருகைபதிவேட்டில் கையெழுத்திட்டனர். போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
