BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி உத்திர தீ மிதி திருவிழா.

தஞ்சை அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி உத்திர தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பங்குனி உத்திரம்

தஞ்சை விளார்சாலை அண்ணாநகரில் அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 57-வது ஆண்டாக இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

அதைத்தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அங்காள ஈஸ்வரி அம்மன், முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலையில் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் இருந்து அங்காள ஈஸ்வரி அம்மன் சிலை முன்செல்ல பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.

அக்னி குண்டத்தில் இறங்கினர்

இவர்களில் பலர் காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், முளைப்பாரி எடுத்தும் வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக சென்று அண்ணாநகரில் உள்ள கோவில் திடலை சென்றடைந்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமான பக்தர்கள் இறங்கினர்.

தீச்சட்டியை கையில் ஏந்தியபடியும், அலகு குத்தியபடியும், குழந்தைகளை தோளில் சுமந்தப்படியும் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி குண்டத்தில் இறங்கினர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

மேலும் தீ மிதி திருவிழாவையொட்டி விளார் சாலை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )