மாவட்ட செய்திகள்
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களைத் திரட்டி தென்குமரி நாட்டுப்புறக் கலைஞர்கள் கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர் முனைவர் அ.கா.பெருமாளின் முனைப்பால் உருவான இந்த அமைப்பு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்துவருகிறது. அதன் ஒரு அங்கமாக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இலவச மருத்துவ முகாமினை நடத்தியது.

நாகர்கோவில் வல்லன்குமாரன்விளை முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இந்த முகாம் நடந்தது. முகாமினை வரலாற்று ஆய்வாளர் அ.கா.பெருமாள் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். கால்வின் இருதய மருத்துவமனையோடு சேர்ந்து இந்த இலவச மருத்துவ முகாம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் இதயப் பரிசோதனை, கண் பரிசோதனை, விழித்திரை நோய் பரிசோதனை, கண்புரை நோய் பரிசோதனை, கண்பார்வை குறைபாடு, கண் அழுத்த நோய் பரிசோதனை ஆகியவையும் செய்யப்பட்டன.
இதுகுறித்து தென்குமரி நாட்டுப்புறக் கலைஞர்கள் கழகத்தின் தலைவர் தங்கமணி கூறுகையில், “கரோனா நேரத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டோம். பலரும் வாழ்வாதாரம் இழந்தனர். தொழில் இழப்பு ஏற்பட்டு, குடும்பங்களே கஷ்ட சூழலுக்குள் சிக்கின. அதில் பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தனர். அதில் இருந்து இப்போதுதான் மீண்டு வருகிறோம். கரோனா காலகட்டமே எங்களுக்கென வலுவாக ஒரு அமைப்பு தேவை என்பதை உணர்த்தியது. அந்தவகையில் அமைப்பின் மூலம் இப்போது இந்த மருத்துவ முகாமை நடத்தியிருக்கிறோம். இதன் மூலம் கிராமியக் கலைஞர்களின் ஆரோக்கியத்தையும் உறுதிபடுத்துகிறோம்” என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
