மாவட்ட செய்திகள்
பணக்காரர்களுக்காக நடத்தப்படும் அரசாக இருக்கிறது மத்திய அரசு பணக்காரர்களுக்காக நடத்தப்படும் அரசாக இருக்கிறது என்றார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன.
தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தவறான கொள்கைகளால் மக்களுக்கு அடி மேல் அடி விழுகிறது. அதைத் தொடர்ந்து கரோனா பரவல் காரணமாக மக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகினர். ஆனால், மக்களுக்கு அரசு எதுவுமே செய்யவில்லை.
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர். நடுத்தர மக்கள் ஏழையாகிவிட்டனர். ஏழைகள் பரம ஏழைகளாக மாறிவிட்டனர். தகவல் தொழில்நுட்பத் துறையைத் தவிர அனைத்து துறைகளும் மிகுந்த கஷ்டத்தில் உள்ளன. கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அரை ஊதியம், கால் ஊதியம் மட்டுமே கிடைத்து வருகிறது.
வெளிநாட்டுப் பயணிகள் வருகை இல்லாததால் சுற்றுலா துறையும் மிகப் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதைச் சார்ந்த உணவகம், வாடகை வாகன நிறுவனங்கள் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. விலைவாசி மீண்டும் மீண்டும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயரப் போகிறது. மன்மோகன் சிங் காலத்தில் பெட்ரோல் விலை ரூ. 70-க்கும், எரிவாயு உருளை ரூ. 400-க்கும் விற்றபோது, அதை கேலி செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போது, எரிவாயு உருளை விலை ரூ. 1,000-ஐ நெருங்கிவிட்ட நிலையில், அது பற்றி அவர்கள் பேசுவதில்லை.
இந்த நாட்டில் பணக்காரர்களை விட சாமானிய மக்களுக்குத்தான் அதிகமாக வரி விதிக்கப்படுகிறது. பணக்காரர்களுக்கு 3 சதவீதம் வரி என்றால், ஆட்டோ ஓட்டுகிறவர்களுக்கு 30 சதவீதம் வரி நிர்ணயிக்கப்படுகிறது. ஏழை மக்கள் மீது அதிக வரி விதிப்பது ஆபத்தானது. வரி என்பது பணக்காரர்களுக்கு அதிகமாகவும், ஏழைகளுக்குக் குறைவாகவும் இருக்க வேண்டிய நிலையில், நம் நாட்டில் அதற்கு மாறாக இருக்கிறது. இது பணக்காரர்களுக்காக நடத்தப்படும் அரசாக இருக்கிறது.
மன்மோகன் சிங் காலத்தில் கைப்பேசி சேவைக்குப் போட்டி இருந்ததால், கட்டணம் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது போட்டி குறைந்துவிட்டதால், கட்டணம் அதிகமாக இருக்கிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மொத்த விலை குறீட்டெண் 13 சதவீதமாக இருக்கும்போது சில்லறை பணவீக்கம் 6 சதவீதமாக எப்படி இருக்க முடியும். இதற்கு பதில் சொல்ல யாருமில்லை.
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக இப்போது தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்தப் போர் எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கும் எனத் தெரியாது. ஆனால், அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்துவதால், தங்கத்துக்கு ஆபத்து இருக்கிறது. வட்டி விகிதம் உயர, உயர தங்கத்தின் விலை டாலர் மதிப்பில் இறங்கும். அதேசமயம், ரூபாயின் மதிப்பு எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. ரூபாய் மதிப்பு குறைந்தால் தங்கத்தின் விலை ரொம்பவும் குறையாது. ரூபாயின் மதிப்பு இப்படியே இருந்தால், தங்கத்தின் விலையில் திருத்தத்தை எதிர்பார்க்கலாம்.பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு இன்னும் ஓராண்டுக்கு பொறுமையாக இருப்பது நல்லது. இலங்கையில் சுற்றுலா, தேயிலை மற்றும் ஜவுளி ஏற்றுமதியே அந்நாட்டுப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கரோனா காரணமாக சுற்றுலா துறையும், ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக தேயிலை ஏற்றுமதியும் நிகழவில்லை.
இலங்கை பொருளாதார வீழ்ச்சியால் இந்தியாவுக்கு தாக்கம் எதுவும் இருக்காது. இது, இந்தியாவுக்கு அரிய வாய்ப்பு. சீனாவுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகை மொத்தமே 6 பில்லியன் டாலர்தான். இந்தியாவிடம் 600 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கிறது. இலங்கைக்கு 6 பில்லியன் டாலர் நன்கொடையாகக் கொடுத்து உதவினால், தமிழர்கள் இவ்வளவு நாள் பட்ட அவதிக்கு, அவர்களுக்குத் தேவையான நியாயமும், தர்மமும் கிடைக்கும். ஆனால், நம் பிரதமர் செய்வாரா என்பது தெரியவில்லை.
ரயில்வே பட்ஜெட்டில் வடக்கு இந்தியாவுக்கு ரூ. 13,000 கோடியும், தென்னிந்தியாவுக்கு ரூ. 65 கோடியும் வழங்கியுள்ளது. தென்னிந்தியாவுக்கே கொடுக்க மனது வராத பிரதமருக்கு இலங்கைக்கு உதவி செய்ய மனது எப்படி வரும் என்றார் ஆனந்த் சீனிவாசன். இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் ஏ. ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.