BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1972-ம் ஆண்டு படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கோவிந்தராஜூலு தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகராஜ், நிர்வாக அலுவலர் சுகந்தி லிதியாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்குமி ஆலை முதுநிலை மேலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில், 1972-ம் ஆண்டு இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் படித்து, பல்வேறு உயர் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

1972-ம் ஆண்டு பள்ளியில் படித்து மருத்துவர்களாக சேவையாற்றி வரும் மருத்துவர்கள் பாரதி மோகன், கோமதி, சங்கர் சுப்பு, சுகந்தி, சாந்தி, சௌந்திரராஜன் மற்றும் முனைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி பேசினர்.

தொடர்ந்து, பள்ளி மேம்பாட்டு பணிகளுக்கு 1972-ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.2.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது. மேலும், அப்போது பாடம் எடுத்து ஆசிரியர்களை வரவழைத்து கவுரவித்தனர். இதில், முன்னாள் மாணவர்கள் ஷீலாராணி, ராஜலட்சுமி, தியாகராஜன், குணசேகரன் லோகநாதன்,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் பள்ளி காலத்தில் வகுப்பறைகளில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் பாலசுப்பிரமணியன், ஜோசப் ஆகியோர் கூறுகையில், 1972-ம் ஆண்டு இப்பள்ளியில் மொத்தம் 71 பேர் படித்தோம். இதில், 12 பேர் காலமாகிவிட்டனர். மீதமுள்ளவர்களில் 45 பேரை தான் தொடர்பு கொள்ள முடிந்தது. இதில், 36 பேர் குடும்பத்துடன் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அனைவருக்குமே தற்போது 68 வயதாகி விட்டது. ஆனாலும், இங்கு வந்து பள்ளி வளாகத்தையும், எங்களுடன் பயின்ற மாணவர்களையும் பார்க்கும்போது உற்சாகம் பிறந்துள்ளது, என்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )