மாவட்ட செய்திகள்
பள்ளி ஆசிரியைக்கு கத்திக் குத்து – விருத்தாசலத்தில் பரபரப்பு.

கடலூர்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆங்கில ஆசிரியை ரேகா. இவர் வழக்கம் போல, திருவள்ளுவர் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று (மார்ச் 26) மதியம் பள்ளியில் இருந்து சென்று உணவு அருந்திவிட்டு மீண்டும் திரும்பியுள்ளார். அப்போது, அவரின் வீட்டின் அருகே மறைந்திருந்த அடையாளம் தெரியாத சிறுவன் ஒருவன் திடீரென கத்தியால் தாக்கிவிட்டு தப்பித்து ஓடிச் சென்றுள்ளான்.

ஆசிரியையின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர், அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அடையாளம் தெரியாத சிறுவன் தன்னை தாக்கியதாக ஆசிரியை தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக அவரை தாக்கியது பள்ளி மாணவனா அல்லது நகைக்காக வேறு யாரேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடம் கேட்ட போது, இதற்கென தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் சேகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். பட்டப் பகலில் பள்ளி ஆசிரியை கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
