மாவட்ட செய்திகள்
கந்துவட்டியை ஒழிக்க திருத்தச்சட்டம் கொண்டு வர வலியுறுத்தி காங்கிரஸ் பிரமுகர் அக்னிச்சட்டி ஏந்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டம்.

கந்துவட்டியை ஒழிக்க திருத்தச்சட்டம் கொண்டு வர வலியுறுத்தி
காங்கிரஸ் பிரமுகர் அக்னிச்சட்டி ஏந்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டம்.

தமிழக அரசு கந்துவட்டியை ஒழிக்க திருத்தச்சட்டம் கொண்டு வர வலியுறுததி கோவில்பட்டியில் காங்கிரஸ் பிரமுகர் அக்னிச்சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, தனது கழுத்தில் வங்கி காசோலைகளை மாலையாக அணிந்து கொண்டு, கையில் அக்னிச்சட்டியுடன் கந்துவட்டி கும்பல்களை ஒழிக்க திருத்தச்சட்டம் கொண்டு வர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

பின்னர் அவர் கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் வழங்கிய விபரம்: தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் கந்துவட்டி கொடுமையால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு லட்சம் கடன் பெற்றால் வட்டியாக மாதம் ரூ.40 ஆயிரம் (வாரம் ரூ.10 ஆயிரம் வட்டி) வசூல் செய்யப்படுகிறது. வார வட்டி, நாள் வட்டி, மீட்டர் வட்டி என கந்துவட்டி மாபியாக்கள் அட்டூழியம் மிக கொடுமையாக உள்ளது.

கந்துவட்டி கும்பல்கள் ஏழை, எளிய மக்களிடம் பணம் கொடுத்துவிட்டு, அவர்களிடம் இருந்து செக், புரோநோட்டுக்கள் பெறுவது மட்டுமின்றி, அவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆள் கடத்தல், கொலை என்று இந்த கந்துவட்டி கும்பல்கள் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய நெட்வொர்க்காக செயல்பட்டு வருகிறது. எனவே, கந்துவட்டி கும்பல்களை ஒழிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழக அரசு கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி, ஏப்.8-ம் தேதி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் இருந்து அக்னிச்சட்டியுடன் விழிப்புணர்வு பிரசாரம் துவங்கி, கோவில்பட்டி நகர் முழுவதும் மக்களிடையே கந்துவட்டி கொடுமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளேன், என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
