BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

இந்திய அளவில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை கே.வி. தங்கபாலு பேட்டி.

இந்திய அளவில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலு.

தஞ்சாவூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மகாத்மா காந்தி உப்பு சத்யாகிரக பாதயாத்திரை நினைவு காங்கிரஸ் எழுச்சி நடைபயணம் குறித்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக 1930 ஆம் ஆண்டில் அண்ணல் காந்தியடிகள் தலைமையிலும், தமிழ்நாட்டில் மூதறிஞர் ராஜாஜி தலைமையிலும் மாபெரும் யாத்திரை நடைபெற்றது. அந்த வரலாறு மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக 75}ஆவது சுதந்திர தின வைர விழாவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை வேதாரண்யம் உப்பு சத்யாகிரக பாதயாத்திரை நடத்தப்படவுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் நடைபெறுகிற இன்றைய சூழலை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது, இன்றைய இளைஞர்களுக்கு நம்முடைய முன்னோர்கள் நடத்திய மாபெரும் சாதனைகளை, வரலாற்றைச் சொல்வது, மத்தியில் ஆளும் பாஜக அரசு 8 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் மக்கள், ஜனநாயக விரோத நிலைப்பாடுகளை மக்களுக்குத் தெரிவிப்பது போன்றவை மேற்கொள்ளப்படும்.

கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 26 லட்சம் கோடி தமிழ்நாட்டு மக்கள் பணம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு வழியாக மட்டும் மத்திய அரசு வசூலித்துள்ளது. அது, மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை. எல்லா நிலைகளிலும் விலையேற்றம் உயர்ந்து மக்கள் வாங்கும் சக்தியற்று, மிகப்பெரிய கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்ட வடிவங்களை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய அளவில் மூன்றாவது அணி என்பது நடக்காது; அதற்கு வாய்ப்பே கிடையாது. ஆனால், இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் அனைத்து சுதந்திரத்தை விரும்புகிற, ஜனநாயகம், சமூக நீதியைக் காக்கிற சக்திகள், கட்சிகள் இணையப் போகின்றன. இதைத்தான் தில்லியில் தமிழக முதல்வர் குறிப்பிட்டார். கடந்த 2004 ஆம் ஆண்டில் சோனியா காந்தி தலைமையில் அமைந்த கூட்டணி இரு முறை நல்லாட்சியைக் கொடுத்தது. இப்போது மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையில் நல்லாட்சி இயக்கம் வரும். அதற்கு காங்கிரஸ் தலைமை ஏற்கும். தேசியத்தில் நம்பிக்கையுள்ள, ஜனநாயக தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைவர் என்பது நடக்கும். அதற்கான முயற்சிகளை காங்கிரஸ் முன்னெடுக்கும் என்றார் தங்கபாலு.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலர்கள் பொன். கிருஷ்ணமூர்த்தி, சி.கே. பெருமாள், மாவட்டத் தலைவர்கள் பி.ஜி. ராஜேந்திரன் (மாநகர), டி.ஆர். லோகநாதன் (வடக்கு), திருச்சி முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )