மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் மாநகராட்சியில் தினந்தோறும் ஆய்வுபணியை தொடங்கிய மேயர்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் தினந்தோறும் ஒவ்வொரு வார்டாக சென்று அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பணியை நேற்று மேயர் சண்.ராமநாதன் தொடங்கினார்.

தஞ்சாவூர் மாநகராட்சியின் மார்ச் மாத மாமன்ற கூட்டத்தில், தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்து, அங்கு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்படும் என மேயர் சண்.ராமநாதன் அறிவித்தார்.

அதன்படி “நம்ம வார்டில் நம்ம மேயர்” என்ற இலக்குடன் தஞ்சாவூர் மாநகராட்சியின் முதல்வார்டில் நேற்று காலை பள்ளியக்ரஹாரம் பகுதியில் மேயர் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள மாநகராட்சி பள்ளியை பார்வையிட்டு குடிநீர் வசதி, கழிவறை வசதி குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் பள்ளியக்ரஹாரம் கடைவீதி, தெருக்களில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் புதை சாக்கடையில் அவ்வப்போது அடைப்பு ஏற்படுவதாகவும், இதனால் கழிவு நீர் தெருக்களில் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறினர். மேலும், தார் சாலை வசதி அமைத்து தர வேண்டும், குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால் கூடுதலாக குழாய் அமைத்து காலை -மாலை இருவேளையும் தினமும் குடிநீர் வழங்க வேண்டும். குப்பைகளை தினமும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கப்படும் என மேயர் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் செந்தமிழ்செல்வன், புண்ணியமூர்த்தி, மேத்தா, மாநகர நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் மாநகராட்சியின் பல்வேறு நிலை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து 51 வார்டுகளிலும் தினம் ஒரு வார்டு வீதம் சென்று அங்குள்ள பொதுமக்களை சந்தித்து மேயர் குறைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு நிவர்த்தி செய்ய உள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
