மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே தனியார் கல்குவாரிக்கு மின் வயர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பசுவந்தனை உள்ள தீத்தாம்பட்டி ஊராட்சியில் தெற்கு தீத்தாம்பட்டி, கோவிந்தன்பட்டி, வடக்கு வண்டானம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், புதுப்பட்டி,கிராமத்தின் மேற்கே தனியார் கல்குவாரி செயல்படுகிறது. இந்த கல்குவாரிக்கு உயர்அழுத்த மின்சாரம் வழங்குவதற்காக பணிகள் நடந்து வந்தன. இதில், வடக்கு வண்டானம் கிராமம் வழியாக உயர் அழுத்த மின் வயர்கள் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிராம மக்கள் ஏற்கெனவே மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பசுவந்தனை துணை மின் நிலையத்தில் இருந்து தனி மின்மாற்றி அமைத்து, தெற்கு தீத்தாம்பட்டி, கோவிந்தன்பட்டி, வடக்கு வண்டானம் வழியாக உயர்மின் அழுத்த மின்வயர்கள் இணைக்க மின்கம்பம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. தற்போது கோவிந்தன்பட்டி கிராம எல்லை வரை மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கண்டித்தும், உயர் அழுத்த மின்வயர்களை இணைக்கும் மின்கம்பங்களை ஊருக்கு வெளியே வழியாக கொண்டு செல்ல வலியுறுத்தியும் கோவிந்தன்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து, மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர் மற்றும் பசுவந்தனை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் பேச்சிமுத்து, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகர்பான் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தற்காலிகமாக மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்படும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இறுதி முடிவெடுக்கப்படும், என்றனர். இதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கோவில்பட்டியில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்லும் பிரதான சாலையில் காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 4 மணி வரை நீடித்ததால் அந்த வழியாக வந்த பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இங்குள்ள கல்குவாரிக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக உயர் மின் அழுத்தம் வயர்கள் ஊருக்குள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த வயர்கள் இங்குள்ள பள்ளி மற்றும் திருமண மண்டபம் வழியாக செல்கிறது. ஊருக்கு வெளியே மின் கம்பங்கள் அமைத்து கொண்டு செல்ல இடம் உள்ளது. அதைவிடுத்து ஊருக்கு மின்கம்பம் நட்டு, உயர்மின் அழுத்த வயர்களை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எங்கள் கிராமம் வழியாக உயர்மின் அழுத்த வயர்கள் செல்வதால், கடுமையான பாதிப்புகளை நாங்கள் சந்திக்க வேண்டிய நிலை வரும், என்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
