BREAKING NEWS

விளையாட்டு செய்திகள்

முதல் ஒருநாள் போட்டியில் இன்று நியூசி. – இந்தியா மோதல்

குயின்ஸ்டவுன்: நியூசிலாந்து – இந்தியா மகளிர் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, குயின்ஸ்டவுனில் இன்று நடைபெறுகிறது. ஐசிசி மகளிர் ஒருநாள்  உலக கோப்பை  போட்டி  மார்ச் 4 – ஏப்ரல் 3 வரை  நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக  இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பிப்.9ல் நடந்த டி20 போட்டியில் நியூசி. வென்று தொடரை கைப்பற்றியது. அடுத்து மிதாலி ராஜ் தலைமையிலான  இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. போட்டிகள் பிப்.12, 15, 18, 22, 24 தேதிகளில் நடைபெற உள்ளன.

அனைத்து போட்டிகளும் குயின்ஸ்டவுன் நகரில் மட்டும் நடக்க உள்ளன. முதல் ஒருநாள் போட்டி இன்று  நடைபெறுகிறது. உலக கோப்பை தொடருடன் கேப்டன் மிதாலி ராஜ்,  ஜுலன் கோஸ்வாமி ஆகியோர் ஓய்வு முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கோப்பையுடன் விடைபெற இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னோட்டமாக, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்ற  இந்திய அணி வேகம் காட்டும். சொந்த மண்ணில் விளையாடுவது நியூசி. அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.

இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா 4-1 என முன்னிலை வகிக்கிறது. நியூசிலாந்தில்  2019ல் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றி உள்ளது. அதற்கு முன்பு 2015ல் இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியா வசப்படுத்தியுள்ளது. 2017ல் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலக கோப்பை ஆட்டம் ஒன்றிலும் வெறும் 79 ரன்னில் நியூசியை சுருட்டி 186 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால், இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )