BREAKING NEWS

அக்னிபத் திட்டம்: அத்தனை மனுக்களையும் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம்!

அக்னிபத் திட்டம்: அத்தனை மனுக்களையும் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம்!

முப்படைகளுக்கும் ஆள் சேர்க்க மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொடப்பட்ட அத்தனை வழக்குகளையும் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருக்கிறது.

 

அத்துடன், உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டிருக்கும் மனுக்களை அந்நீதிமன்றங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பலாம் அல்லது அந்த மனுக்களைத் தாக்கல் செய்தவர்களின் அனுமதியுடன் அவற்றை நிலுவையில் வைத்துவிட்டு, டெல்லி உயர் நீதிமன்ற விசாரணையில் பங்கெடுத்துக்கொள்ள அவர்களை அனுமதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பான வெவ்வேறு மனுக்கள் விரும்பத்தக்கவை அல்ல; ஒழுங்கானவையும் அல்ல எனத் தெரிவித்திருக்கும் உச்ச நீதிமன்றம், ஒரு உயர் நீதிமன்றத்தின் கருத்து ஒரு வழக்குக்கு முக்கியமானது என்றும், உயர் நீதிமன்றங்களின் அதிகார வரம்பு அதன் முக்கியத்துவத்தை இழக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

 

 

வழக்கமாக இதுபோன்ற தருணங்களில், மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு தாங்களாகவே உயர் நீதிமன்றத்தை அணுகிக்கொள்ளலாம் என்றுதான் உச்ச நீதிமன்றம் உத்தரவிடும். இந்த முறை, உச்ச நீதிமன்றமே தானாக முன்வந்து அத்தனை மனுக்களையும் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறது. இதன் மூலம் அந்த மனுக்கள் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பு உருவாகும் என்றும், நேர விரயம் தவிர்க்கப்படும் என்றும் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்திருக்கிறது.

 

அக்னிபத் திட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களும், இந்தத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு தொடங்கப்பட்ட ஆள் சேர்க்கும் பணிகளை நிறைவுசெய்ய மத்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மனுக்களும், டெல்லி உயர் நீதிமன்றம் உட்பட – பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. கேரளம், பிஹார், பஞ்சாப், ஹரியாணா, உத்தராகண்ட் உயர் நீதிமன்றங்களிலும், கொச்சியில் உள்ள ஆயுதப்படை தீர்ப்பாயத்திலும் இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. இனி இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லி உயர் நீதிமன்றமே விசாரிக்கும்.

இந்தத் திட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளுக்கும் இது பொருந்தும் என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், இந்த மனுக்களை விரைந்து முடிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )