BREAKING NEWS

அரசியல்

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்கத்தைத் தாண்டி தேசிய அரசியலில் கால் பதிக்கும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் கடும் சவாலையும் எதிர்கொண்டு ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட மம்தா, மிகுந்த நம்பிக்கையுடன் அடுத்தடுத்த நகர்வுகளில் சுறுசுறுப்பு காட்டுகிறார். திரிபுரா, கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கால் பதிக்கும் முயற்சிகளில் அக்கட்சி தீவிரமாக இறங்கியிருக்கிறது. எனினும், மம்தாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் குழு தற்போது திரிணமூல் காங்கிரஸுடன் இல்லை.

 

ஐ-பேக் குழு ஒரு கட்சியின் வெற்றிக்காக வியூகங்கள் வகுக்கிறது என்றால், அக்கட்சியின் எல்லா நடவடிக்கைகளிலும் தலையிடும் என்பது இயல்பான விஷயம். தமிழகத்தில் திமுக வரை இந்தப் போக்கைப் பார்க்க முடிந்தது. இவ்விஷயத்தில் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், குறிப்பாக மூத்த தலைவர்கள் அதிருப்தியடைவதும், அவர்களைச் சமாதானப்படுத்த கட்சித் தலைமை முயல்வதும் நடக்கும். தேர்தல் வெற்றிக்கு ஐ-பேக் ஓரளவுக்கு உத்தரவாதம் தருகிறது என்பதால் பல்லைக் கடித்துக்கொண்டு அரசியல் கட்சிகள் அதைப் பொறுத்துக்கொண்டு சமாளிக்கின்றன. தேர்தல் வெற்றிக்குப் பின்னரும், தங்கள் அரசியல் நகர்வுகளை விரிவாக்க ஐ-பேக் குழுவுடனான ஒப்பந்தத்தைச் சில கட்சிகள் தொடர்வது உண்டு.

திரிணமூல் காங்கிரஸும் பிரசாந்த் கிஷோருடனான உறவைத் தொடர்ந்து பேணிவந்தது. இதற்கிடையே, திரிணமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய பெரும்பாலான தலைவர்கள், மம்தாவின் மகத்தான வெற்றிக்குப் பின்னர் மீண்டும் தாய்க்கட்சிக்குத் திரும்பிவிட்டனர். இந்நிலையில், ஐ-பேக் குழுவினர் அளவுக்கு மீறி கட்சி நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும், வேட்பாளர்கள் தேர்வில் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், அரசு நிர்வாகத்தில் குறுக்கீடு செய்யும் அளவுக்கு அக்குழுவினர் சென்றதாகவும் திரிணமூல் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதுதொடர்பாக, மம்தா பானர்ஜியிடம் அவர்கள் பேசிவந்தனர்.

மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையில் நல்ல புரிதல் உண்டு. திரிபுராவில் ஐ-பேக் குழுவைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டபோது அங்கு உடனடியாகச் சென்று அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தவர் அபிஷேக் பானர்ஜி. சமீபத்தில், கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டும்தான் தரப்பட வேண்டும் என அபிஷேக் பேசிவருகிறார். இந்த யோசனையும் ஐ-பேக் தரப்பிலிருந்து தரப்பட்டதுதான் என்கிறார்கள். மூத்த தலைவர்களுடன் மோதல் போக்கில் அபிஷேக் ஈடுபடுவதும் சமீபத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இதையடுத்து, மம்தா பானர்ஜிக்கும் அபிஷேக் பானர்ஜிக்கும் இடையில் முரண்கள் எழுந்திருக்கின்றனவா, கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அபிஷேக் முயற்சிக்கிறாரா என்றெல்லாம் பேச்சுகள் எழுந்திருக்கின்றன.

 

இதற்கிடையே, கட்சியின் மூத்த தலைவரான சந்திரிமா பட்டாச்சார்யாவின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்துவரும் ஐ-பேக் குழுவினர், ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என அபிஷேக் முன்னெடுக்கும் வழிமுறையை ஆதரிக்கும் விதத்தில் ட்வீட் செய்தது சந்திரிமாவை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதுகுறித்து அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஐ-பேக் மறுத்தது.

இப்படியான சூழலில், கட்சியின் தேசிய செயற் குழுவை முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கும் மம்தா பானர்ஜி, ஊடக ஒருங்கிணைப்புக் குழு எனும் பெயரில் ஒரு புதிய குழுவையும் ஏற்படுத்தியிருக்கிறார். அதில், மேற்கு வங்க அமைச்சர்கள் அரூப் பிஸ்வாஸ், சந்திரிமா பட்டாச்சார்யா முன்னாள் எம்.பி குணால் கோஷ் ஆகியோரின் தலைமையில் அக்குழு இயங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர், கட்சியின் ஊடக ஒருங்கிணைப்புப் பணிகளை ஐ-பேக் நிறுவனம்தான் கவனித்துவந்தது. தற்போது அமைக்கப்பட்டிருக்கும் ஊடக ஒருங்கிணைப்புக் குழு, திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கும் இளம் தலைவர்களுக்கும் இடையிலான கருத்து வேற்றுமைகளைக் களையும் பணியில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் மம்தாவுக்கும் பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துக்கும் இடையிலான உறவு முறிகிறதா எனும் கேள்விகள் உச்சமடைந்திருக்கின்றன. இதுவரை அப்படியான செய்திகளை ஐ-பேக் மறுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )