அரசியல்
காங்கிரஸின் நகல் தான் ஆம் ஆத்மி கட்சி: மோடி இரட்டைத் தாக்குதல்!
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக இன்று பதான்கோட் சென்றிருக்கும் பிரதமர் மோடி, அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “உங்களுக்குச் சேவை செய்ய எனக்கு ஐந்து ஆண்டுகள் கொடுங்கள். விவசாயம், வணிகம், தொழில் துறை ஆகியவற்றை லாபகரமானதாக மாற்றிக்காட்டுவேன் என உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டார். மேலும், “காங்கிரஸ் ஒரிஜினல் என்றால் ஆம் ஆத்மி கட்சி அதன் ஃபோட்டோகாப்பி (நகல்)” என்று அவர் சாடினார்.
“பஞ்சாப் மாநிலத்தை நாங்கள் ‘பஞ்சாபியத்’ (பஞ்சாப் தன்மை) எனும் கோணத்தில் பார்க்கிறோம். அதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் பஞ்சாபை அரசியல் பார்வையுடனேயே அணுகுகின்றன” என்று பேசிய மோடி, தேசப் பிரிவினை நிகழ்வைக் குறிப்பிட்டு காங்கிரஸை விமர்சிக்கவும் தயங்கவில்லை. குருநானக் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உருவாக்கப்பட்ட கர்தார்புர் சாஹிப் குருத்வாராவை, தேசப் பிரிவினையின்போது இந்தியாவில் தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார். கர்தார்புர் சாஹிப் குருத்வாரா பாகிஸ்தானின் நாரோவால் மாவட்டத்தில் இருக்கிறது.
இன்று சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு ரவிதாஸ் ஜெயந்தி என்பதால், டெல்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள குரு ரவிதாஸ் விஷ்ராம் கோயிலுக்குச் சென்று மோடி வழிபட்டார்.
அதைப் பற்றிப் பேசிய அவர், “இன்று குரு ரவிதாஸ் ஜெயந்தி. இங்கு வருவதற்கு முன்னர் ரவிதாஸ் கோயிலுக்குச் சென்று அவரது ஆசியை வேண்டினேன்” என்று குறிப்பிட்டார்.