ஆடுகளத்திலேயே பிரிந்த கபடி வீரரின் உயிர்… கண்ணீர் விட்டு கதறிய சக வீரர்கள்: சோகத்தில் மூழ்கிய கிராமம்.

கபடி விளையாட்டில் ரெய்டுக்குச் சென்ற வீரர் எதிரணியிடம் பிடிபடாமல் இருக்க தாண்டி குதித்து விழுந்தபோது மூர்ச்சையாகி உயிரிழந்த சம்பவம் விளையாட்டு வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (21). சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்த இவர் மிகச் சிறந்த கபடி வீரர். தன் திறமையை அதிகப்படுத்திக் கொள்ள சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சியும் பெற்று வருகிறார்.

இவரது ஊரில் முரட்டுக்காளை என்ற பெயரில் கபடி வீரர்கள் கொண்ட அணி உள்ளது. இந்த அணி வீரர்கள் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கபடி போட்டிகளில் சென்று விளையாடி கோப்பை வென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் இவர்களது அணியும் கலந்து கொண்டது.
