உலக செய்திகள்
தமிழக விவசாயிகள் டெல்லி ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தம்.
அய்யாகண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகள் 100 பேர் நியூ டெல்லி ரயில் நிலையத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இரு தினங்களுக்கு முன்பு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, விவசாய விளைபொருட்களுக்கு இருமடங்கு லாபம் தரும் விலையைத் தருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்ததாகவும் நெல் கிலோ ரூ.18-க்கு விற்பதை ரூ.54 ஆக உயர்த்தித் தருவதாக கூறியிருந்ததாகவும் ஆனால் அதைக் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியிட்டிருந்தார்.
கரும்பு டன்னுக்கு ரூ.2,700-ல் இருந்து ரூ.8,100 அதிகரித்து தரப்படும் என்றார். தற்போது ரூ.200 மட்டும் உயர்த்திக் கொடுத்துள்ளார்.
உடனடியாக MSP தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். நெல், கரும்பு விலையை நிர்ணயம் செய்யும் கமிஷன் டெல்லியில் இருப்பதால் தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். ஏற்கனவே டெல்லியில் வேளாண் சட்டமசோதாவுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேல் விவசாயிகள் போராட்டம் நடத்திய விவகாரம் சர்வதேச அளவில் பேசு பொருள் ஆனது. எனவே, தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் அவர்களை டெல்லி காவல்துறை நியூ டெல்லி ரயில் நிலையத்தில் தடுத்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.