உலக செய்திகள்
50 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ – கனடாவில் என்ன நடக்கிறது?
கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருவதால், கனடாவில் 50 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக அவசர நிலையை, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரகடனப்படுத்தியுள்ளார்.
உலகளவில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், ஊரடங்கு, பொதுவெளியில் முகக் கவசம் அணிதல், கொரோனா தடுப்பூசி ஆகிய பணிகளை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. இதேபோல் கனடாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. இந்நிலையில், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி ஓட்டுநர்களும், அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று கனடா அரசு அதிரடியாக அறிவித்தது.
மேலும், லாரி ஓட்டுநர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் கனடா அரசு அறிவித்ததோடு, கொரோனா கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது. கனடா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த 2 வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் பாதுகாப்பு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில், தற்போது அங்கு நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கனடா- அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கியதால், இருநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து தடைபட்டது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பாலம் முடக்கப்பட்டதால், அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாலத்தில் நின்ற லாரிகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்நிலையில், லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், கனடாவில் அவசர நிலையை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரகடனப்படுத்தியுள்ளார். லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, மகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க இந்த அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போராட்டம் நடத்தும் லாரி ஓட்டுநர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அவர்களின் தனிப்பட்ட மற்றும் கார்ப்பரேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும், அவர்களின் இன்சூரன்ஸ் நிறுத்தி வைக்கப்படும் எனவும் கனடா அரசு எச்சரித்துள்ளது.
மேலும் லாரி ஒட்டுநர்களின் போரட்டத்தை ஆதரிக்கும் க்ரவுட் பண்டிங் இணையதளங்கள் மீது, பண மோசடி தடுப்பு விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தநாட்டு அரசு கூறியுள்ளது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் கனடாவில் பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் போர் நடைபெறாத காலகட்டத்தில் அந்தநாட்டில் அவசர சட்டம் அமல்படுத்தப்படுவது இது இராண்டவது முறையாகும்.
இதற்கு முன்னதாக ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையும், அந்நாட்டு முன்னாள் பிரதமருமான பியரே ட்ரூடோ, 1970-ம் ஆண்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியிருந்தார். கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக அமெரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.