கரூர் அருகே இலங்கை தமிழர் முகாம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு – பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 4 கிராமங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் இலங்கை தமிழர் முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 437 குடும்பங்களை சார்ந்த 1339 பேர் தற்காலிக குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்களை தோரணக்கல்பட்டி கிராமத்திற்கு இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தோரணக்கல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 3 மாத காலமாக மனு அளித்து வருகின்றனர். ஆனால், வருவாய் துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலையில் தோரணக்கல்பட்டி, பாறையூர், கொக்கம்பட்டி, எரிச்சகனத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சார்ந்த கிராம மக்கள் வீடுகள், பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
கிராம மக்களிடம் மண்மங்கலம் வட்டாட்சியர் ராதிகா, கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இன்று மாலையில் தமிழக முதல்வர் கரூருக்கு வருகை தர உள்ள நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு குறைந்த தொலைவில் உள்ள கிராமங்களில் கருப்பு கொடி கட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
