குடிபோதையில் மனைவியை அடித்துக்கொன்ற கணவன் கைது.

தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை, அம்மாகுளம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் துரைமாணிக்கம்,36, கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி,32.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் துரைமாணிக்கம், குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர்,மனைவியை சந்தேகமடைந்த நிலையில், அவரிடம் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த துரைமாணிக்கம், வீட்டில் இருந்து இரும்பு கம்பியை எடுத்து, மனைவியின் தலையில் அடித்துள்ளார். இதில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த தகவலறிந்த சூரக்கோட்டை வி.ஏ.ஓ., சங்கீதா, தலுாக்கா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார், ராஜேஸ்வரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது கணவன் துரைமாணிக்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
