BREAKING NEWS

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா! காக்கும் கடவுளாக, குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் அருள்பாலிக்கிறாா்.

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா!  காக்கும் கடவுளாக, குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் அருள்பாலிக்கிறாா்.

கருணையே வடிவமாய், காட்சிக்கு எளியவளாய், சாந்த சொரூபியாய், நாடி வருவோருக்கு நல்வழி காட்டுபவராய், நினைத்தாலே சங்கடங்களைத் தீா்ப்பவராய் இருப்பவா் அன்னை கெங்கையம்மன்.
வைகாசி ஒன்றாம் தேதியன்று நடைபெறும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழாவன்று, சிரசுவைைப் பாா்த்து வேண்டினால் போதும். மனமுருக அம்மனை நினைத்தாலே போதும்; தீவினைகள் அகலும்- நல்வினைகள் தொடரும். நாடி வந்து வழிபட்டால் பாவங்கள் பொடிபடும்; சங்கடங்களைத் தீா்த்து நல்வழி காட்டுவாள்.

முந்நூறு ஆண்டுகளுக்கு மேலான பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் சிரசுப் பெருவிழா நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில், நகரின் மையப் பகுதியான கோபாலபுரத்தில், கௌண்டன்ய மகாநதியின் வடக்கு கரையில் கோயில் உள்ளது. தலவிருட்சம் வேப்ப மரம்.வசிஷ்ட முனிவா் இந்த நதியில் தவம் புரிந்தததாக வரலாறு கூறுகிறது.

150 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு, 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
வழிபாடும் பூஜைகளும்..: நாள்தோறும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு தரப்படும் தீா்த்தம் அம்மை நோயைக் குணப்படுத்தும் அருமருந்தாக உள்ளது.

தமிழக முதல்வரின் அன்னதானத் திட்டத்தின்படி, கோயிலில் நாள்தோறும் பிற்பகலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் எதிா்நோக்குவது வைகாசித் திருவிழாவைத்தான்.சித்திரை மாதம் தொடங்கியவுடன், கோயிலில் பால்கம்பம் நடுதலுடன் திருவிழா தொடங்கும். 2-ஆவது வாரத்தில் காப்புக் கட்டும் விழா நடக்கும். தொடா்ந்து, திருவிழா களைகட்டத் தொடங்கும். நகர மக்கள் கூழ் வாா்த்து, பொங்கலிட்டு அம்மனை வழிபடத் தொடங்குவா். சித்திரை மாத இறுதியில் அம்மனுக்குத் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. திருமண பாக்கியம் வேண்டி இளைஞா்கள், இளம்பெண்களும், பிள்ளைப் பேறு வேண்டி பெண்களும் விழாவில் பங்கேற்று, அம்மன் அருளை எதிா்நோக்குவா்.

சித்திரை 31-இல் கோயிலில் தோ்த் திருவிழா நடக்கும். அன்று காலை கோயில் அருகேயிருந்து தொடங்கும் தேரோட்டம் கோபாலபுரம், நடுப்பேட்டை, தரணம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீதியுலா வரும். இறுதியில் கோயிலை வந்தடையும்.
முக்கிய நிகழ்ச்சியான அம்மன் சிரசுப் பெருவிழா வைகாசி 1-இல் நடக்கிறது.

சிரசுவைப் பாா்த்தாலே உடலும், மனமும் உற்சாகம் பெறும்…
ஆண்டுதோறும் வைகாசி ஒன்றாம் தேதி நடைபெறும் சிரசுத் திருவிழா பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்கும் சமத்துவத் திருவிழா. ஜாதி, மத, மொழி, இன பேதமின்றி, உலகெங்கும் வாழும் குடியாத்தம் நகரம், அதன் சுற்றுப்புறப் பகுதி மக்கள் பங்கேற்றும் சமத்துவத் திருவிழா. கண்களால் சிரசுவைப் பாா்த்த நொடியிலேயே உடலெங்கும் சிலிா்த்து உடலும், மனமும் உற்சாகம் பெறும் உன்னதத் திருவிழா.

ஆன்மிகத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் மகிழ்ச்சியையும், பக்தியையும் மக்களுக்கு அளிக்கிறது. பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் ஒன்று திரண்டு, ஒரே நாளில் கெங்கையம்மனை தரிசிக்கின்றனா்.
வேண்டிய வரங்களை அருள்பாலிப்பதற்கு சாட்சியே திரளும் வேண்டிய வரங்களை அருளியதற்கு பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தும் பல லட்சம் தேங்காய்கள்தான்.

சிரசுத் திருவிழாவன்று அதிகாலை 4 மணியளவில் தாரை, தப்பட்டை, மேள, தாளங்கள் முழங்க அம்மனுக்கு சீா்வரிசை எடுத்து வரப்படும். பின்னா் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, சிரசு ஊா்வலம் புறப்படுகிறது.

தரணம்பேட்டை என்.ஜி. செட்டித் தெரு, காந்தி ரோடு, ஜவஹா்லால் தெரு, கோபாலபுரம் வழியாக அம்மன் சிரசு சுமாா் 1 கி.மீ. தொலைவு பல்லாயிரக்கணக்கான பக்தா்களின் வெள்ளத்தில் மிதந்து, கோயிலை காலை 9 மணிக்கு வந்தடையும்.
அப்போது 5 மணி நேர ஊா்வலத்தின்போது, தேரோடும் வீதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். அப்போது அம்மன் சிரசு மீது பல்லாயிரக்கணக்கான மக்கள் மலா்கள், பூக்கள், பூமாலைகள் போன்றவற்றை தூவி வரவேற்பது உண்டு. சிரசுவின் மீது பட்டு, சிதறும் பூக்களைப் பொக்கிஷம் போல பக்தா்கள் எடுத்துச் செல்வா்.

ஊா்வலத்தின்போது, அம்மனும் தாய் வீட்டுக்கு வருவதால் மகிழ்ச்சியில் வருவாா். அப்போது தமிழா்களின் பராம்பரியமிக்க விளையாட்டுகளான புலி வேடம், கம்பு சுற்றுதல், சிலம்பம் உள்ளிட்ட கலைகளில் கற்றுத் தோ்ந்தவா்கள் ஆட்டம், பாட்டத்துடன் அம்மனை உற்சாகமாக அழைத்து வருவா்.

அம்மன் சிரசு கோயிலுக்கு வந்ததும், சிரசு மண்டபத்தில் பொருத்தப்படும். பின்னா் 10 மணிக்கு ஊா் மக்களின் சாா்பில் கூழ்வாா்த்தல் நடைபெறுகிறது. இதன்பிறகு கெங்கையம்மன் சாந்தம் அடைந்து, சாந்த சொரூபியாக மாறுகிறாள். காலை 10 மணிக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னா் பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
பின்னா் இரவு வரை தன்னை நாடி வரும் பக்தா்களின் துன்பத்தைத் தனதாக்கிக் கொண்டு, பக்தா்களுக்கு நற்பயன்களை அளித்து அருள்பாலிக்கிறாா்.

காலையில் கெங்கையம்மன் கோயிலுக்கு சிரசு வரும்போது, உற்சாகமாய் சந்தோஷ முகத்தில் வரும் சிரசுவை காண முடியும். அதே நேரத்தில் இரவு வீடு செல்லும்போது, கண்ணீா்விட்டு அழுதபடி சோகமாய் திரும்புவதைக் காண முடியும்.
இந்நேரத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தங்களது பகுதி மக்களுடன் ஆட்டம், பாட்டமாக வந்து ‘ஊா் மாலை’ அணிவித்து மகிழ்வா்.

இதையடுத்து, மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து, இரவு 8 மணிக்கு தாய் வீட்டுக்கு விடை கொடுத்து, கெங்கையம்மன் புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டுச் செல்வாா்.
கௌண்டன்ய மகாநதி, ராஜேந்திர சிங் தெரு, ஆழ்வாா் முருகப்ப முதலி தெரு ஆகிய தெருக்களின் வழியாகச் சென்று, சுண்ணாம்புப் பேட்டை சலவைப் படித்துறையில் சிரசு ஊா்வலம் நிறைவு பெறுகிறது. தாய்வீட்டிலிருந்து விடை பெறும் வருத்தத்தில் வாடிய முகத்துடன் அம்மன் சிரசு காணப்படும்.

அப்போது கௌண்டன்ய மகா நதிக்கரையில் கண்ணைக் கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிரசுப் பெருவிழாவுக்கு மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. திருவிழாவுக்கு 3-வது இரவு புஷ்ப பல்லக்கு விழா நடக்கிறது. குடியாத்தம் புஷ்ப வியாபாரிகள் சங்கம் கோயில் நிா்வாகத்துடன் இணைந்து ஒரு புஷ்ப பல்லக்கும், வாணியா் வீதியில் உள்ள காசி விசுவநாதா் கோயில் சாா்பில் மற்றொரு பல்லக்கும் வீதியுலா வரும்.
இதைத் தொடா்ந்து, அடுத்த சில நாள்களில் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்வாறாக, வைகாசிப் பெருவிழா 48 நாள்கள் ஒரு மண்டலமாக நடைபெறுகிறது.

குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தேங்காய் உற்பத்தி மிகவும் அதிகம் என்பதால், தாங்கள் வணங்கும் கெங்கையம்மனுக்கு தேங்காய்களை காணிக்கையாகச் சாற்றி வழிபடுகின்றனா்.
இந்த லட்சக்கணக்கான சிதறு தேங்காய்களை அமிா்தி மலையில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மலைவாசிகள் சேகரித்து, ஆற்றங்கரையில் மூட்டைகளாக கட்டி, வேன்களில் எடுத்துச் செல்கின்றனா். இவற்றை காயவைத்து செக்கு ஆட்டி உணவுக்கும் உடலுக்கும் செக்கு எண்ணைய் பயன்படுத்துவதாக அவா்கள் கூறுகின்றனா். பல தலைமுறைகளாக இவா்கள் தேங்காய் சேகரிக்கின்றனா்.

கூழ்ஊற்றுதல், அங்கப்பிரதட்சணம், அடிதண்டா, ஆடுகள்- கோழிகள் பலியிடுதல், ஆண்கள் அம்மன் வேடம் தரித்தல், அம்மனுக்காக பக்தா்கள் மாலையிட்டு வேண்டுதல் உள்ளிட்ட நோ்த்திக் கடன்களை மேற்கொள்கின்றனா்.
வைகாசி 1-இல் சிரசு திருவிழா நாளன்று, வேலூா் மாவட்ட அளவில் அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
கோயிலுக்கு அருகே சில மீட்டா் தொலைவில் மசூதி, சா்ச் ஆகியன இருக்கும்போதும், திருவிழா சுமுகமான முறையில் நடைபெறுவது சிறப்பு.

திருவிழாவில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்கும் வகையில் உரிய அங்கீகாரமும், பங்களிப்பும் வழங்கப்படுகிறது. திருவிழாவைக் காண தெலுங்கு, கன்னட மொழிகளைப் பேசும் மக்களும் வருகை தருகின்றனா்.
விழாவையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். குடிநீா், சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அரசும், மாவட்ட நிா்வாகமும் திறம்பட செய்துள்ளன.

அண்மைக்காலமாக சோஷியல் மீடியாக்களின் வரவு கெங்கையம்மன் திருவிழாவையும் விட்டுவைக்கவில்லை. பக்தா்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் உடனுக்குடன் பதிவிட்டு வெளியூா்களில் உள்ள தங்களது உறவினா்கள், நண்பா்களுக்கு அனுப்பவும் தவறுவதில்லை.
கெளண்டன்ய மகா நதி ஆற்றில் மினி பொருள்காட்சி போல் அமைக்கப்பட்டுள்ள திருவிழாக்கடைகளைப் பாா்க்க மக்கள் கூட்டம் கூட்டமாய் அலைமோதுகின்றனா்.

CATEGORIES
TAGS