குற்றம்
#BREAKING திமுக வட்ட செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கு.. சமயபுரத்தில் 2 பேர் கைது..!
சென்னை மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் செல்வம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி சமயபுரத்தில் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் செல்வம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி சமயபுரத்தில் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மடிப்பாக்கம் பெரியார்நகர் 6வது தெருவை சேர்ந்தவர் செல்வம்(35). இவர் 188வது வார்டு திமுக வட்ட செயலாளராக இருந்து வந்தார். சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பாக அவரது மனைவி போட்டியிட மனு செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்வத்துக்கு சால்வை அணிவிப்பது போல் 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வம் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தேர்தல் சம்பந்தமாக செல்வம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சம்பவத்தின்போது செல்வத்துடன் இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் சந்தேகப்படும் ரவுடிகளின் பட்டியலை வைத்தும் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாகவும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் உயரதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் திருச்சி சமயபுரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் சென்ற ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகிய 2 பேரை சமயபுரம் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் சேலையூரை சேர்ந்தவர் என்பதும், தனசீலன் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக மேலும் சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாகவும், கொலைக்கான காரணம் குறித்தும் தெரியவரும்.