BREAKING NEWS

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் எளிதில்கிடைக்க கோரிக்கை

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் எளிதில்கிடைக்க கோரிக்கை

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் பக்தர்களுக்கு எளிதில்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகத்திய மகரிஷி, பொதிகை மலைக்கு வந்தபோது, குற்றாலநாதர் கோவில் வைணவ கோவிலாக இருந்தது. கோவிலுக்கு செல்ல முயன்ற அவரை, துவார பாலகர்கள் தடுத்தனர்.

வைணவர் போல வேடம் பூண்டு பேரருவியில் நீராடி, திருமாலை வணங்குவது போல் கோவிலுக்குள் புகுந்த அகத்தியர், பெருமாளாக இருந்த சுவாமி மீது தன் கையை வைத்து சிவனாக மாற்றினார்.பெருமாளை சிவனாக மாற்றுவதற்காக, அவரது தலையில் கை வைத்து அகத்தியர் அழுத்தியதால், குற்றாலநாதருக்கு தீராத தலைவலி ஏற்பட்டது. அதைப் போக்க அகத்திய மாமுனி, சந்தனாதி தைலம் காய்ச்சினார் என புராணங்கள் கூறுகின்றன.

குற்றாலம் கோவிலில் இன்றும் சுவாமிக்கு, காலசாந்தி அபிஷேகத்தின் போது சந்தனாதி தைலம் தடவப்பட்ட பின்பே, அபிஷேகம் நடக்கும். விலாமிச்சை வேர், அதிமதுரம், ஏல அரிசி, சிறுநாகப்பூ, வாய்விளங்கம், மதரப்பூ, சதகுப்பை, அக்கரா, தாளிசபத்திரி, தேவாரம், பூலான்கிழங்கு, மரமஞ்சள், சந்தனக்கட்டை‌ வங்காளப்பச்சை, சாதிக்காய்ப் பருப்பு, லவங்கப் பட்டை, செண்பக மொட்டு, பால்சாம்பிராணி, நல்லெண்ணெய், இளநீர், கிராம்பு, பசும்பால் உள்ளிட்ட 41 மூலிகைப் பொருட்களை கொண்டு இந்த தைலம் காய்ச்சப்படுகிறது.

இதில் கோவிலுக்கு தேவையான தைலம் சேகரித்த பின், மீதமுள்ள தைலம் பக்தர்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தைலம் தலைவலி, சளி, மூச்சுத்திணறல், மற்றும் வயிற்று வலி போன்ற பல்வேறு நோய்களைப் போக்கும் மருத்துவ குணம் கொண்டது என நம்பப்படுகிறது.

இந்த தைலத்திற்கு பக்தர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. இந்நிலையில் சந்தனாதி தைலம் திருக்குற்றால நாதசுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டது.

25மிலி விலை 200ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதை வாங்க பக்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டிய நிலையில் பலருக்கு கிடைக்காத சூழ்நிலை நிலவியது.

எனவே சந்தனாதி தைலம் தேவைப்படும் பக்தர்களுக்கு எளிதில் கிடைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS