கொரோனா காரணமாக கடந்த ஆண்டு வகுப்புகள் முழுமையாக நடத்தப்படவில்லை என்றும், இதனால் தேர்ச்சி சதவீதம் என்பது குறைந்துள்ளதாகவும்,இந்த ஆண்டு குறித்த காலத்தில் தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக நடத்தப்படுவதால் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் தமிழக அரசின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 16 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விவசாயிகளுக்கு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் அரசால் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும்,
மேலும் நடப்பாண்டில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வும் இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் ,மீதமுள்ள 60 ஆயிரத்து 420 ஏக்கர் நடவு செய்வதற்காக நாற்றுகள் தயார் நிலையில் உள்ளதாக பேசினார்.
இத்திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் மாற்று பயிர் சாகுபடி செய்வதற்கு மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பேசினார், இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 90 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வருமானம் உயர்த்தப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் இதன்மூலம் பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விவசாயிகள் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் பயன்களை பெற அருகில் உள்ள வேளாண் அலுவலர்கள் அல்லது உழவன் செயலி மூலமாக பதிவேற்றம் செய்து பயன்பெற முடியும் என்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள 16 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை விவசாயிகள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும் பொதுவாக அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிந்து தான் மாணவர்கள் வருகிறார்கள் என்றும் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறார்கள். மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2351 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் பழைய முறையில் எந்த முறையில் இருந்ததோ அதுபோல வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான சிறப்பு ஆசிரியர்கள் நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள்ளாக அது முழுமை அடையும்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு வகுப்புகள் முழுமையாக நடத்தப்படவில்லை என்றும், இதனால் தேர்ச்சி சதவீதம் என்பது குறைந்துள்ளது, இந்த ஆண்டு குறித்த காலத்தில் தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக நடத்தப்படுவதால் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து அவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்யக்கூடாது என்றும் மாணவர்கள் நாட்டின் மிகப்பெரிய வளங்கள் என்றும்,அரசு, மாணவர்களின் நலனுக்காக தன்னார்வலர்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் மூலம் ஊக்கப்படுத்தி வருகிறது.
மாணவர்கள் தேர்வு மதிப்பெண்களை வைத்து தவறான முடிவுக்கு செல்லக்கூடாது என்று அமைச்சர் தெரிவித்தார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி – தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்.