BREAKING NEWS

கொரோனா

corona vaccine: 50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி வீண்..? மத்திய சுகாதாரத்துறை பரபரப்பு விளக்கம்..

பிப்ரவரி மாதத்திற்குள் 50 லட்சம் பயன்படுத்தப்படாத கோவிஷீல்ட் டோஸ்கள் வீணாகிவிடும் என்று சில ஊடங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாட்டில் இவர்கள் 3 கோடி பேர் வரை இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அடுத்தபடியாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு கீழே இருந்தாலும் இணை இடர்ப்பாடுகள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டது.இந்தப் பிரிவில் 27 கோடி மக்கள் வருவார்கள் என்று மதிப்பிடப்பட்டது.
கோவிஷீல்டு (ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராஜெனீகா), கோவேக்சின் (பாரத் பயோடெக்) ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசரப் பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி திட்டம் தொடங்கி ஓராண்டு கடந்த நிலையில் தற்போது வரை 167.87 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் நாடு முழுவதுமுள்ள ஏராளமான தனியார் மருத்துவமனைகளில் சுமார் 50 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துகள் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதத் தொடக்கத்தில் பயன்படுத்தப்படாமலேயே காலாவதியாகும் அபாயம் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.இது தொடர்பாக இந்திய மருத்துவக் கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இந்தநிலையில் இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுக்குறித்து வெளியிட்ட அறிக்கையில், தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தமட்டில் மானிய விலையிலோ அல்லது பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழோ தடுப்பூசி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை முயற்சி செய்யலாம் என்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட மாநிலங்களின் கோரிக்கையின் பேரில், தடுப்பூசி காலாவதியாகாமல் இருக்கவும், வீணாதலை தவிர்க்கவும் தனியார் துறை சுகாதார வசதிகளிலிருந்து மாநில அரசு சுகாதார வசதிகளுக்கு விதிவிலக்கு அடிப்படையில் தடுப்பூசிகளை மாற்றும் ஏற்பாட்டிற்கு ஆட்சேபனை இல்லை என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியது. இது குறித்த தகவல்கள் கோவின் டிஜிட்டல் தளத்தில் கிடைக்கின்றன.

இது தவிர, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா , குஜராத் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, தனியார் கோவிட் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )