சினிமா
அஜித்தின் புதிய படத்துக்காக தயாராகும் அரங்கு.
அஜித் நடிக்கும் வலிமை வருகிற 24-ஆம் தேதி வெளியாகிறது அதையடுத்து அவர் நடிக்க இருக்கும் படத்திற்கு அரங்கு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இரண்டு படங்களுக்கு நடுவில் கணிசமான இடைவெளி விடுகிறார் அஜித். புதிய படங்களில் நடிக்க அவர் அவசரப்படுவதில்லை. வலிமை திரைப்படம் வெளியாக காலதாமதம் ஆனதால் படம் வெளிவரும் முன்பே அஜித்தின் அடுத்தப் படத்திற்கான வேலைகள் தொடங்கியுள்ளன.
இந்தப் படத்தையும் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். நேர்கொண்டபார்வை, வலிமை படங்களை தொடர்ந்து இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இந்தப் புதிய படத்தில் அஜித்துடன் கூட்டணி அமைக்கின்றனர்.
இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ஆம் தேதி தொடங்கப்படும் என்கின்றன செய்திகள். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை மவுண்ட் ரோட்டை பிரதி செய்வது போல் அரங்குகள் அமைக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையின் நடுநாயகமாக இருக்கும் மவுண்ட் ரோடில் படப்பிடிப்பு நடத்த இயலாது என்பதால் அதே போன்ற அரங்கை அவர்கள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அமைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் குறித்த மேலதிக தகவல்களை வலிமை வெளியானதும் அறிவிக்க இருக்கிறார்கள். வலிமையே போல் அதிக நாட்கள் எடுக்காமல் மிகக்குறைந்த தினங்களில் இந்தப் புதிய படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அனேகமாக இந்த வருட தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகலாம்.