BREAKING NEWS

சினிமா

அஜித் டயலாக்கை சொல்லி புலம்பும் விஜய் டீம்..! இது விதியா இல்ல தி.மு.க.வின் சதியா!

“இதற்கெல்லாம் காரணமே திமுக தான்.. எங்கள் வளர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை” என்று புலம்புகிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர்

’ஒரு லாஜிக் வேணாமா ஜீவா? பக்கத்து ஆட்டோவுல கண்ணாடிய சரி பண்ணினா, என்னோட ஆட்டோ எப்படி ஸ்டார் ஆகும்?’ என்று அஜித்திடம் கருணாஸ் புலம்புவது போல் ஆகிவிட்டது விஜய்யின் ‘மக்கள் இயக்க’த்தின் நிலைமை. ஆட்டோ சின்னம் மட்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை வூடுகட்டி அடித்திடுவோம், வேண்டுமென்றே எங்கள் வெற்றியை தடுக்க துடிக்கிறது தி.மு.க! என்று சொல்லி புலம்புகிறார்கள்.

இதுதான் மேட்டரு….

அதாவது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சுமார் நூற்று எழுபது பேர் சுயேட்சையாக களமிறங்கினர். இவர்களில் பெரும்பாலானோர் வெற்றி பெற்று விஜய்க்கு ஆச்சரியத்தையும், மற்ற கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியையும் தந்தனர்.


எல்லோரும் எதிர்பார்த்தது போலவே இதோ நகர்ப்புற தேர்தலில் போட்டியிடவும் தயாராகிவிட்டது விஜய்யின் மக்கள் இயக்கம். அவர்கள் தேர்தல் கமிஷனிடம் தங்களுக்கு ‘ஆட்டோ சின்னம்’ ஒதுக்கும்படி கேட்டார்கள். ஆனால் ‘உங்கள் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சி அல்ல. எனவே பொது சின்னம் ஒதுக்க முடியாது.’ என்று கையை விரித்துவிட்டது.

இதில் கடுப்பாகிவிட்டது விஜய் டீம். ஆக்சுவலாக ஆட்டோ சின்னம் கிடைத்திருந்தால், வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆட்டோ டிரைவராக நடித்திருந்த சீன்ஸ், பாடல்கள் ஆகியவற்றை போஸ்டர் மற்றும் வீடியோக்களாக்கி மாஸாக பிரசாரம் செய்து வாக்குகளை ஈர்க்கும் முடிவில் இருந்தனர். மேலும், பாட்ஷா படத்தில் ரஜினி ஆட்டோ டிரைவராக நடித்ததையும் உள்ளே இழுத்துவிட்டு ‘அண்ணா! தலைவா!’ என்று அவரது வாக்குவங்கியையும் அள்ள நினைத்திருந்தனர். ஆனால் இப்போது எல்லாம் காலி.

தங்களுக்கு ஆட்டோ சின்னம் கிடைக்காததற்கு காரணமே தி.மு.க.தான். எங்களின் அரசியல் வளர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியலை. ஆட்டோ சின்னம் கிடைத்தால் பல தொகுதிகளில் வெற்றியை அடிச்சு தூக்கிடுவோம் என்று நினைத்தே இப்படி செக் வெச்சுட்டாங்க! என்கிறார்கள்.

ஆனால் தி.மு.க.வோ ‘என்னடா இது இஸ்கூல் பசங்க மாதிரி எங்களை புகார் சொல்றீங்க. தேர்தல் கமிஷனோட விதி அது. கட்சியை பதிவு பண்ணாம களமிறங்குனது உங்க விதி. இதுல நாங்க எங்கே பண்ணினோம் சதி? உங்களையெல்லாம் போட்டியா நினைப்போமா நாங்க! ஆளுங்கட்சிடா நாங்க’ என்று டி.ஆர். போல் அதிரடி பதில் தருகின்றனர்.

ஆனாலும் ஆட்டோ சிக்காத கடுப்பில் புலம்புகிறது விஜய் டீம்.

மறுபடியும் இப்ப முதல் பாராவை வாசியுங்க!

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )