சினிமா
இது போன்ற ஆக்ஷன் காட்சிகளை எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது – ‘வலிமை’ குறித்து ஹியூமா குரேஷி பகிர்வு.
ஒவ்வொரு முறையும் நாங்கள் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கும் போது நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அந்த காட்சிகளை படத்தில் பார்த்த போதுதான் வினோத்தின் விசாலமான பார்வை எனக்கு புரிந்தது. இது போன்ற ஆக்ஷன் காட்சிகளை எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது” என்று நடிகை ஹியூமா குரேஷி தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஹியூமா குரேஷி கூறியுள்ளதாவது:
ஹெச்.வினோத் என்னிடம் ‘வலிமை’ கதையை கூறியபோது எனக்கு அது மிகவும் சுவாரஸ்யமாக தோன்றியது. கூடவே அஜித் சாருடன் நடிக்க நான் எப்போதும் விரும்பினேன். ‘பில்லா 2’ படத்தில் நாங்கள் இணைந்து நடித்திருக்க வேண்டியது. ஆனால் அது நடக்கவில்லை. எனவே இந்த முறை அது நடந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
இதற்கு முன் நான் போலீஸாக நடித்ததில்லை. இது எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். காரணம் பொதுவாக பெண்களுக்கு இது போன்ற பாத்திரங்கள் கிடைப்பதில்லை. படத்தில் அஜித்துக்கும் எனக்குமான உறவே சுவாரஸ்யமான ஒன்று. வழக்கமாக திரைப்படங்களில் நாயகனும் நாயகியும் இருந்தால் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவே காட்சிப்படுத்தப்படும். ஆனால் இந்த படத்தில் வினோத் அதை மாற்ற முயற்சித்திருக்கிறார். பார்வையாளர்களுக்கு இது மிகவும் புதிதாக இருக்கும். ‘வலிமை’ போன்ற ஒரு வெகுஜன கமர்ஷியல் திரைப்படங்களில் இது போன்ற விஷயங்கள் இடம்பெறுவது நல்ல அறிகுறி.
பெண்களால் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடியாது அல்லது அதை அவர்கள் விரும்புவதில்லை என்பது ஒரு க்ளிஷே ஆகிவிட்டது. ஆண்களைப் போலவே பெண்களாலும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடியும். ஒவ்வொரு முறையும் நாங்கள் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கும் போது நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அந்த காட்சிகளை படத்தில் பார்த்த போதுதான் வினோத்தின் விசாலமான பார்வை எனக்கு புரிந்தது. இது போன்ற ஆக்ஷன் காட்சிகளை எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது.