சினிமா
சமந்தா சொன்ன ஸ்பெஷல் விஷயத்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!
நடிகை சமந்தா, சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நெகிழ்ச்சியான தருணத்தை தனது ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார் சமந்தா.
தமிழ், தெலுங்கு என எந்த பக்கம் திரும்பினாலும் சமந்தா குறித்த பேச்சு தான். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் முழுக்க முழுக்க தனது திறமையால் இன்று இந்த இடத்தை அடைந்துள்ளார் சமந்தா. இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் டாப் ஹீரோயின்கள் லிஸ்டில் சம்முவும் ஒருவர். இவரை உச்சபட்ச நடிகர்களின் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர். ஆனாலும் சமந்தா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் ஃபீமைல் லீடிங் படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார். விவாகரத்து, மன உளைச்சல், ஏகப்பட்ட வதந்திகள் மத்தியில் சிக்கி கொண்டவர், அதிலிருந்து மீண்டு வந்து தற்போது திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
யோகா, டான்ஸ், பிக்னிக் என தனது விடுமுறை நாட்களையும் வித்தியாசமாக செலவழித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவான சமந்தா, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பல புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவார். சில சமயம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்வார். இந்நிலையில் சமீபத்தில் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டான பீஸ்ட் படத்தின் ’அரபிக்குத்து’ பாடலுக்கு சமந்தா டான்ஸ் ஆடி வெளியிட்ட வீடியோ சூப்பர் டூப்பர் வைரல்.
இப்படி அன்றாடம் சமந்தா குறித்த ஏதேனும் செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டுள்ளது. அந்த வகையில் இன்று சமந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான விஷயத்தை ரசிகர்களுக்காக ஷேர் செய்து இருக்கிறார். சினிமா துறையில் சமந்தா காலடி எடுத்து வைத்து இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகின்றன. ’மாஸ்கோவின் காவிரி’ படத்தில் தான் சமந்தா முதன் முறையாக கதாநாயகிகாக புக் செய்யப்பட்டார். ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பே ’விண்ணை தாண்டி வருவாயா’
படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஏ மாயா சேசவே’ திரைக்கு வந்தது. இந்த படத்தில் த்ரிஷா ரோலில் சமந்தா, நாகசைதன்யா உடன் சேர்ந்து நடித்து இருப்பார். இதனால் ஏ மாயா சேசவே சமந்தாவின் முதல் கதாநாயகி படமானது.
அதே நேரம் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கிளைமேக்ஸில் சிறப்பு தோற்றத்திலும் சமந்தா நடித்து இருப்பார். ஆரம்ப காலத்தில் இப்படி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய சமந்தா தற்போது திரைத்துறையில் 12 ஆண்டுகளை கடந்துள்ளார். அதை குறிக்கும் வகையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் செய்தியில் “ இன்றுடன் நான் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில் லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் என பல மறக்க முடியாத அனுபவங்களுடன் வாழ்ந்துள்ளேன். ஒவ்வொரு தருணமும் எனக்கு சிறந்த தருணமாக இருந்தது. அதே போல் எப்போதுமே என் பக்கம் நிற்கும் உலகிலேயே விஸ்வாசமான ரசிகர்களை நான் பெற்றதே எனது பெரிய அதிர்ஷ்டம்” என்று தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சினிமா துறை, இதுவரையில் பல ஹீரோயின்களை சந்தித்து இருக்கிறது. அதில் ஒரு சிலர் 2 படங்களில் நடித்து விட்டு பிறகு காணாமல் போய்விடுவார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே 10 ஆண்டுகளை கடந்து வெற்றிக்கொடி கட்டுவர், அந்த லிஸ்டில் மூத்த நடிகைகளுக்கு பின்பு நயன் தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு அடுத்தப்படியாக தற்போது சமந்தாவும் சேர்ந்து விட்டார்.