BREAKING NEWS

சினிமா

அஜித் ரசிகர்கள் செய்த நல்ல காரியம்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்பிற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் ‘வலிமை’ படம் வெளியாகி உள்ளது.

கடந்த வியாழக்கிழமை வெளியான ‘வலிமை’ ரிலீசை திருவிழா போல் கொண்டாடினர் ரசிகர்கள். மேளதாளம், கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் குவிந்திருந்த ரசிகர்கள் அந்த வழியாக வந்த பால் வண்டியை மடக்கி அதில் இருந்த தயிரை பால் என நினைத்து அதைத் திருடிச் சென்று அபிஷேகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜாலி ஹோமில் தங்கி படிக்கும் 150 நரிக்குறவர் இன குழந்தைகளுக்கு நகரிலுள்ள ஷண்முகா திரையரங்கில், “GOD’S CHILDREN” என்ற பெயரில் சிறப்பு காட்சிக்கு புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி அஜீத் ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். காலையில் திரையரங்கத்துக்கு ஆர்வமுடன் குழந்தைகள் வந்து காலை காட்சியை பார்த்துள்ளனர்.

இதுகுறித்து இந்நிகழ்வை ஒருங்கிணைத்த அஜித் ரசிகரான மோகன் கூறும் போது, வலிமை பட அறிமுக நிகழ்வை ஜாலி ஹோமில் தங்கிபடித்த குழந்தைகளுக்கு முன்பாக நடத்தினோம். அப்போது அக்குழந்தைகள் திரையரங்கு சென்று படம் பார்க்க ஆசைப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் தர்ஷா என்ற அஜித் ரசிகர் இதற்கான முழு செலவையும் ஏற்பதாக தெரிவித்தார்.

மொத்தம் 18,000 ரூபாய் செலவானது. அக்குழந்தைகளை படம் பார்க்க அழைத்து வந்து அவர்களின் சந்தோஷத்தில் பங்கேற்றோம் என தெரிவித்துள்ளார். ஒருசில அஜித் ரசிகர்கள் பால் திருடியதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், ஹோமில் தங்கிபடித்த குழந்தைகளை ‘வலிமை’ படத்திற்கு அஜித் ரசிகர்கள் அழைத்து சென்றுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )