சி.எஸ் அகாடமி 14-வயது மாணவன் கோவையின் எலன் மஸ்க் 9-வது வகுப்பிலேயே உலக சாதனை.

கோவைபுதூரில் வசித்து வருபவர்கள் சிவராம் – அனுஷா தம்பதிகள். இவர்களுக்கு அர்னவ், நட்சத்திரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் அர்னவ் அங்குள்ள சி.எஸ். அகாடமி பள்ளியில் 9-வது வகுப்பும், தங்கை 4-வது வகுப்பும் படித்து வருகிறார்கள். சிவராமின் பூர்வீகம் தேனி அருகே உள்ள கம்பம் ஆகும். இவர்களது பூர்வீக தொழில் விவசாயம். குழந்தைகளின் கல்விக்காக கோவைபுதூருக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். மாணவர் அர்னவுக்கு சிறு வயது முதலே கணிப்பொறி துறையில் அதிக நாட்டம் ஏற்பட்டது. குறிப்பாக ரோபோடிக் சம்பந்தமான துறையில் அர்னவுக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டது. 5-வது வகுப்பு படிக்கும்போதே கம்யூட்டர் கல்வியில் மகனின் இந்த ஆர்வத்தை கண்டு தந்தை சிவராம் அங்குள்ள ஒரு கம்யூட்டர் பயிற்சி மையத்திற்கு அழைத்து சென்றார். பயிற்சி மைய உரிமையாளரிடம் தனது மகனுக்கு கம்யூட்டர் கல்வியில் உள்ள ஆர்வத்தை எடுத்து சொல்லி அவரை பயிற்சியில் சேர்த்துக் கொள்ளுமாறும் C, C++ பயிற்சியை கற்றுத் தருமாறும் வேண்டினார்.

ஆனால் பயிற்சியாளரோ இந்த படிப்பு கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே கற்றுத்தரப்படுகிறது. 5-வது வகுப்பு படிக்கும் தங்கள் மகனுக்கு இதை கற்றத்தர முடியாது, அப்படியே கற்றுத்தந்தாலும் இந்த வயதில் அவரால் எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது என்று கூறி மறுத்து விட்டார். ஆனால் சிவராமோ விடுவதாக இல்லை. இரண்டு நாட்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் அந்த பயிற்சியை அளியுங்கள். அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை, சரிவர கவனம் செலுத்த முடியவில்லை என்றால் அவரை தான் வீட்டுக்கு அழைத்து சென்று விடுவதாக கூறினார். இதையடுத்து பயிற்சியாளர் அர்னவுக்கு C, C++ பயிற்சியை கற்றுத்தந்தார். அர்னவின் ஆர்வம், அவரது அறிவு கூர்மை, புரிந்து கொள்ளும்விதம் பயிற்சியாளரை ஆச்சரிய மூட்டியது. இதையடுத்து அந்த பயிற்சியை முழுமையாக கற்று பட்டய சான்றிதழையும் (Diploma Certificate) பெற்றார் அர்னவ்.
குறைந்த பட்சம் 6மாதம் கற்க வேண்டிய இந்த பயிற்சியை மூன்று மாத காலத்திலேயே அர்னவ் நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து அடுத்த 4மாதத்தில் வெப் டெவலப்மெண்ட் (Web Development) பயிற்சியையும், அடுத்த 3மாதத்தில் ஜாவா (JAVA) பயிற்சியையும், அடுத்த 24 நாட்களிலேயே பைதான், பயிற்சியையும், நிறைவு செய்து அதற்குரிய பட்டய சான்றிதழையும் பெற்றார். 5-வது வகுப்பு படிக்கும்போதே மேற்கண்ட இரண்டு கம்ப்யூட்டர் பட்டய படிப்புகளையும் நிறைவு செய்து சான்றிதழ் வாங்கியது கம்ப்யூட்டர் மைய இயக்குனரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சி.எஸ் அகாடமின் தாளாளர், தலைமை ஆசிரியர், மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தியதால் நவீன தகவல் தொழில்நுட்பத்தில் சாதனைகளை நிகழ்த்தத் தொடங்கினார்
இந்த நிலையில் அர்னவ் 6-வது வகுப்பு படிக்கும்போது கோவை ஜே.சி.டி. பொறியியல் கல்லூரியில் செயற்கை அறிவாற்றல் அல்லது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறை சம்பந்தமான மாநில அளவிலான கருத்தரங்கு-போட்டி நடந்தது. கம்ப்யூட்டர் துறையில் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை புரட்சி ஏற்படும் என்றால், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறையே புரட்சி ஏற்படும். அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவில் புரட்சி ஏற்பட்டு வருகிறது. “கடந்த கால நிகழ்வுகளைக் கொண்டு எதிர்காலத்தை கணிப்பது, மனித அறிவை எந்திரங்களுக்கு வழங்குவது, எந்திரங்களையே சுயமாக சிந்திக்க வைத்து, எந்திரத்தின் விருப்பபடி பணியாற்ற வைப்பது (ரோபோ அல்லது எந்திர மனிதன்) ஆகியவை செயற்கை நுண்ணறிவு துறையின் முக்கியமான செயல்பாடாகும்”. இந்த துறையில் சிறந்து விளங்க வேண்டுமானால் அந்த நபர் கணித மேதையாகவும், மென்பொருள் துறையில் வல்லுநராகவும், அதிபுத்திசாலியாகவும் விளங்கவேண்டும்.
ஜே.சி.டி. கல்லூரியில் நடந்த செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கில் அறிக்கை சமர்பிக்க (Paper Presentation) அனுமதி தருமாறு கல்லூரி நிர்வாகத்தை வேண்டினார் அர்னவ். 6-வது வகுப்பு படிக்கும் மாணவனை பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் போட்டி போட வைப்பதா? என்று முதலில் தயங்கிய கல்லூரி நிர்வாகம் அதன்பின் ஒப்புக்கொண்டது. தமிழகம் முழுவதும் இருந்து பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற அந்த போட்டியில் அர்னவ் அறிக்கை சமர்பித்து,
அதற்கு பிரமிப்பூட்டும் விளக்கத்தையும் அளித்தார். அந்த போட்டியில் முதல் பரிசு பெற்றார் அர்னவ். இது அனைவரையும் பிரமிக்க செய்தது. அதை தொடர்ந்து கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிகளில் நடந்த செயற்கை நுண்ணறிவு தொடர்பான கருத்தரங்கு-போட்டிகளிலும் முதல் பரிசை தட்டி சென்றார் அர்னவ். 7-வது வகுப்பு படிக்கும்போது பெருந்துறை கொங்கு என்ஜினியரிங் கல்லூரியில் சர்வதேச அளவிலான செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு-போட்டி நடந்தது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் முதல் இடம்பிடித்து சாதனை படைத்தார் அர்னவ்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் இரண்டு முதல் நான்கு பேர் வரை குழுவாக இருந்தனர். ஆனால் அர்னவ் மட்டும் தனி ஆளாக இருந்து அறிக்கையும் சமர்பித்து, அதற்குரிய விளக்கமும் அளித்து அசத்தினார். அதை தொடர்ந்து கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரி, காருண்யா கல்லூரி, குமரகுரு கல்லூரிகளில் நடந்த கருத்தரங்கு-போட்டிகளில் பங்கேற்று அறிக்கைகள் சமர்பித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் அர்னவ்.
கோவை ஸ்கூல் ஆப் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் அமைப்பில் இணைந்து உள்ள உலகின் முதல் இளம் வயது (11வயது) மாணவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார் அர்னவ். 11வயதில் கோவை இரத்தினம் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள பல மென் பொருள் நிறுவனத்திற்கு புதிய புதிய Project – களையும் தயார் செய்து கொடுத்துள்ளார் அர்னவ். கூகுள் டென்சர் ப்ளோ –வில் (Google Tensorflow) செயற்கை நுண்ணறிவு தொடர்பாக உலக அளவில் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றும் உரையாற்றி உள்ளார் அர்னவ். இது தவிர இன்போசிஸ் நிறுவனம் இந்திய அளவில் நடத்திய போட்டியில் 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் முதல் 5 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்தார். இன்போசிஸ் நிறுவனத்தின் துணை தலைவர் சுதா நாராயணமூர்த்தியின் பாராட்டையும் பெற்றார். மேலும் ஸ்டார்ட் அப் கல்சர் (Srartup Culture) அமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு தொழில் துறையில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் அளித்து உள்ளார். கடந்த வாரம் கோவை சி.ஐ.டி கல்லூரியின் கணிப்பொறி துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி உள்ளார்.
அமெரிக்காவின் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு வந்த போதும் தனது உயர் கல்வியை கருத்தில் கொண்டு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். தடையற்ற இண்டர்நெட் சேவை தொடர்பான தனது இரண்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கு உலக அளவில் காப்புரிமை பெறும் முயற்சியிலும் இறங்கி உள்ளார் அர்னவ். இது குறித்து மானவர் அர்னவ் கூறுகையில் டெஸ்லா அதிபர் எலன் மஸ்க்தான் என்னுடைய ரோல் மாடல். அவரை போன்று சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். விரைவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒரு நிறுவனத்தை தொடங்க உள்ளேன். அதன்மூலம் கணிப்பொறி, மென்பொருள், தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், வங்கி, நிதி நிறுவனங்கள் போன்ற துறைகளை சார்ந்தவர்களுக்கு உதவ வேண்டும் என்றார் 13வயதாகும் மாணவர் அர்னவ். அர்னவ் பற்றிய மேலும் விவரங்களை www.voicecode.in என்ற அவரது இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
