தஞ்சையில் புறவழிச்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கொட்டி தேங்கி இருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஈரப்பதளவை 22 சதவீதமாக உயர்த்தி உடனே கொள்முதல் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை எனவும் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கரம்பை, ஆலங்குடி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் புறவழிச்சாலையில் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு நெல்லை கொட்டி காய வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெய்து வரும் மழை காரணமாக காய வைக்கப்பட்டு வந்த சுமார் 20 ஆயிரம் மூட்டை நெல் முழுவதுமாக மழையில் நனைந்துள்ளன.


கரம்பை பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல்லை சாலையில் கொட்டி வைத்ததாக கூறும் விவசாயிகள், அறுவடை செய்தபோது 12 சதவீதம் இருந்தது. தற்போது மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகரித்து உள்ளதால் ஈரப்பதத்தை தளர்த்தி 22 சதவீதம் வரை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


டாஸ்மாக் மதுபானத்தை பாதுகாக்கும் அரசு விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை மழையில் நனைய விடுவதால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் ஈரப்பதளவை உயர்த்தி வழங்காவிட்டால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
