தஞ்சையில் மேலும் ஒரு டிரான்ஸ்போர்ட் மோசடி. 600 க்கும் மேற்பட்டவர்களிடம் 1,000 கோடி மோசடி நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி, இதனையடுத்து ராஹத் டிரன்ஸ்போட் மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது பரீனா டிராவல்ஸ் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் தலைமையிடமாக கொண்டு பரீனா டூர் & டிராவல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை ஹக்கீம் என்பவர் நடத்தி வருகிறார், . இதில் தஞ்சாவூர், அய்யம்பேட்டை, பாபநாசம், ராஜகிரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதற்கு இணையாக மாதம் மாதம் லாபம் தருவதாக கூறி எங்களை பங்குதாரர்களாக சேர்த்தார்கள். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 3,000 ரூபாய் லாபம் தருவதாக கூறினார்கள்.

மேலும் பங்குதாரர்களின் முதலீடு தொகைகளை கொண்டு பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் வாங்கப்படும் என கூறினார்கள். ஆனால் முதலீடு செய்து மூன்று மாதங்கள் மட்டுமே பங்கு தொகையை வழங்கினர். பிறகு கடந்த 2019 முதல் மூன்று ஆண்டுகளாக பங்குதாரர்களுக்கு உரிய பங்கு தொகை வழங்கவில்லை. இது குறித்து கேட்டால் தங்களை மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள்கூறுகின்றனர்.

இதில் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை ஒவ்வொருவரும் முதலீடு செய்துள்ளோம், தங்களிடம் பெறப்பட்ட தொகையை கொண்டு அவர் எந்த ஒரு வாகனங்களையும் வாங்க வில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளதாகவும், அனைத்து வாகனங்களும் கடனுதவி மூலமே வாங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் அவரது பெயரில் வாங்காமல் உறவினர்கள் பெயரிலேயே அனைத்து வாகனம் வாங்கியுள்ளார். தற்போது அனைத்து வாகனங்களையும் விற்று வருவதாகவும், அலுவலகங்களையும் மூடிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

இதில் பல பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும், ஆயிரம் கோடி ரூபாய் மேல் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் எனவே காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் உரிமையாளர் ஹக்கீம் வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தொகையை கேட்டு அவரது வீட்டிற்கு சென்றால் அவரது அவரது மனைவியும், உறவினர்களும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
