தஞ்சை மாவட்டம். கும்பகோணம் வட்டம், பம்பைப்படையூர் மாமன்னர் இராசராச்சோழன் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் மாமன்னர் இராசராசசோழன் “சதய விழா” பம்பப்படையூர் சமத்துவபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சோழர்களின் வரலாற்று படக்காட்சியினை தொடங்கி “பழையாறை. உடையாளூர். சோழன்மாளிகை, தாராசுரம் ஆகியவை சோழப் பேரரசின் அழியாத அடையாளங்களை சுமந்து கொண்டிருக்கும் சரித்திர பிரசித்தி பெற்ற ஊர்கள். பழையாறை சோழர் குலத்தின் புகழ் வரலாற்றில் நிலைத்து நிற்கும் வகையில் சாதனைகள் புரிந்த ராசராசசோழன் பிறந்து, வளர்ந்து, முடிசூட்டி, பின்னர் மறைந்தது என எல்லா பெருமைகளையும் தனதாக்கிக் கொண்ட ஊராகும்.
இவருடைய பேரரசியார் பஞ்சவன்மாதேவி, உடன்பிறந்த குலக்கொடி குந்தவை நாச்சியார் ஆகியோரின் பள்ளிப்படை கோயில்களும் இங்குதான் உள்ளன.
தமிழனின் நீண்ட நெடிய வரலாற்றில் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் காலம் குறிப்பிடத்தக்கவை. தொன்மையான நாகரீகம் கொண்ட மூத்த குடிமக்கள் ” தமிழர்கள் ” என்பதற்கு இங்கு கொட்டிக் கிடக்கும் சான்றுகள் ஏராளம்.
புதைந்து போனவை, மறைந்து போனவை, அருமை. தெரியாமல் தொலைந்து போனவை என்பதெல்லாம் போக இன்னும் ஏராளம் தமிழகம் முழுவதும் உள்ளன.
குறிப்பாக கல்லே இல்லாத ஊரில் கற்களைக் கொண்டே உலகின் தொன்மை சின்னங்களில் ஒன்றாகிய “தஞ்சாவூர் பெரிய கோயிலை” கட்டிய அருள்மொழிவர்மன் தேவர் ஆட்சிசெய்த இப்பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை அகழ்வராய்ச்சிகள் மேற்கொண்டு வெளிக்கொணர வேண்டிய சரித்திர மிச்சங்கள் ஏராளமாக உள்ளன.
மைய அரசை வலியுறுத்தி இப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி முயற்சிகளை மேற்கொண்டால் கீழடியில் கண்ட தமிழனின் தொன்மை வாழ்வில் மேன்மைகளைப் போல் ஏராள உண்மைகள் வெளிவர வாய்ப்புண்டு இன்றைய தலைமுறை வரலாறு அறிய வேண்டியது அவசியமாகிறது.
அறிந்தால்தான் பெருமை மிக்க நம்முடைய தமிழர் வாழ்வும். மாட்சிமையும் புழுதி படிந்த ஓவியமாய் கிடந்திடும் நிலைமை மாறும். திட்டமிட்டு புகழ் மறைக்க துடிப்போரிடமிருந்து நம் பாரம்பரிய அடையாளங்களை பாதுகாத்தாலதான் மூத்த மனித இனம். தமிழ் இனம் என்ற உண்மையை பாரறிய பறை சாற்ற முடியும்”. என்பதே இக் கருத்தரங்க நோக்கம்.
கருத்தரங்கிற்கு தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகம் உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் துணைத்தலைவர் சு.க.முத்துச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
கருத்தரங்களில் மாமன்னர் இராசராசசோழனின் வரலாற்று செய்திகள் தொடர்புடைய தலைப்புகளில் டி.எஸ்.ஸ்ரீதர், வரலாற்று ஆய்வாளர். குடவாயில்.
பாலசுப்ரமணியன் சிட்டி யூனியன் வங்கி நல அமைப்பு தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் தமிழக தொல்லியல் துறை முன்னாள் அலுவலர் கி.ஸ்ரீதரன், ஆகியோர் உரையாற்றினர்.
இக்கருத்தரங்கில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான “இராசராசசோழன் நிர்வாகத்திறன் பற்றிய சிறப்புகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் இடத்தை ஜெ.யாமினி இரண்டாம் இடத்தை அனு மூன்றாம் இடத்தை ஶ்ரீராம் பெற்றனர்.
“இராசராசசோழனின் சமய சார்பற்ற சமயக் கொள்கை” என்றத் தலைப்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான
கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும், கலந்துகொண்ட மாணவர்களுக்கு புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
முன்னதாக கும்பகோணம் மாவட்டம் (தேர்வு நிலை) செய்தியாளர்கள் நலச் சங்கம் சார்பில் தலைவர் பாலசாட்சம், செயலாளர் ராமநாதன், பொருளாளர் சிராஜிதீன்மற்றும் நிர்வாகிகள் பத்திரிகையாளர் நலன் சார்ந்த கோரிக்கை மனு அளித்தனர்.