தமிழகத்தில் அம்பேத்கர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துகிறார்கள் பா.ஜ.க. பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரியசாமி ஆவேச பேச்சு.

தமிழகத்தில் தலித் தலைவர்கள் அம்பேத்கர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தி, வயிறு வளர்த்துக் கொண்டும் வருகிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரியசாமி ஆவேசமாக பேசினார்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் மோடி ஆட்சியின் எட்டாண்டு சாதனைகள் குறித்த விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் தஞ்சை அருகே உள்ள கள்ளபெரம்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட பட்டியலின அணி தலைவர் விக்னேஷ் குமார் ராஜா தலைமை வகித்தார். பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் முன்னிலை வகித்தார். பட்டியலின அணி மாவட்ட பார்வையாளர் ஆசைக்கனி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரியசாமி கலந்துகொண்டு பாரதிய ஜனதா கட்சியின் எட்டு ஆண்டுகள் சாதனை விளக்கங்கள் குறித்து பேசியதாவது: எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டுகள் நிறைவு மற்றும் 9ஆம் ஆண்டு தொடக்கம் குறித்து அந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத் திட்டங்கள் பற்றியும், அந்தத் திட்டங்களில் தலித் மக்கள் எவ்வாறு பயன் அடைந்து உள்ளார்கள் என்பது குறித்தும் நாங்கள் நேரடியாக சென்று விலக்கி வருகிறோம். குறிப்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 வங்கிக் கணக்கில் செலுத்துவது. இலவச கேஸ் இணைப்பு வழங்கியது. முத்ரா திட்டம் இன்சூரன்ஸ் திட்டங்கள் போன்றவற்றை நாங்கள் செய்து வருகிறோம். புரட்சியாளர் அம்பேத்கரை இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சராக கொண்டுவருவதற்கு, இந்து மகாசபையும், ஜன சங்கமும் மறைமுகமாக சப்போர்ட் செய்து வெற்றிபெற செய்ததால்தான் அம்பேத்கர் சட்டத்துறை அமைச்சராக இருந்தார். அதனால்தான் அவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதினார். அம்பேத்கரின் பெயரை சொல்லிக்கொண்டு தமிழகத்தில் அதிகம்பேர் வயிறு வளர்த்து வருகின்றனர். திருமாவளவன் போன்றவர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இது வெட்கக்கேடான செயலாகும். திராவிட கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் சுமார் 50 ஆண்டுகாலமாக இந்த தமிழ் மண்ணை வீணாக்கி வைத்துள்ளனர். ஈ.வே. ராமசாமி என்கின்ற பெரியார் சொன்னது கடவுள் இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள். வணங்குபவன் காட்டுமிராண்டி என்றார். ஆனால் அது தமிழகத்தில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் சாதாரண தமிழக மக்களும், பாரதிய ஜனதா கட்சி தோழர்களும் இந்த மண்ணில் ஆன்மீகத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை. இது பெரியார் மண் என்று சொல்லுகிறார்கள். இதே மண்ணில் கீழ்வெண்மணியில் 42 பேர்களை தீவைத்துக் கொளுத்தினார்கள். அப்போது பெரியார் உயிரோடு இருந்தார். அந்த சம்பவம் குறித்து மௌனமாக தான் பெரியார் இருந்தார். ஒரு சிற்டறிக்கைக் கூட பெரியார் விடவில்லை. அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த அண்ணா, இந்த சம்பவம் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுங்கள் என்றார். இது தான் பெரியார் மன்னா? 42 பேர் தீயிட்டுக் கொளுத்தியது சமூக நீதியா? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தற்போது திமுக அரசு செய்து வரும் ஓராண்டு சாதனை என்பது மக்கள் மத்தியில் வேதனையை தான் அளிக்கிறது. மேலும் இந்த மண்ணை கம்யூனிஸம் பூமி என்று சொல்வார்கள். அதில் நம்மளை ஜிந்தாபாத் என்று சொல்லதான் வைத்துக்கொள்வார்கள். இந்த மக்களுக்காக போராடி நான் சிறை சென்றவன். தூக்குத் தண்டனை பெற்றவன். அதில் இருந்து விடுதலையாகி இப்போது நான் உங்கள் மத்தியில் உயிரோடு நின்று கொண்டிருக்கிறேன். போராளி என்றால் இப்படி இருக்க வேண்டும். தற்போது அம்பேத்கரின் படத்தை வைத்துக்கொண்டு போராளி என்று நாடகமாடுகிறார்கள். தமிழகத்தில் அம்பேத்கர்ரிஷம் என்று சொல்லிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து பண்ணுகிறார்கள். வயிறு வளர்க்கிறார்கள். பட்டியலின தலைவர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவருமே இந்த மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. அம்பேத்கரின் பி.ஏ.வையே அவருக்கு எதிராக தேர்தல் நிக்க வைத்து அம்பேத்கரை தோக்கடித்த கட்சி காங்கிரஸ் கட்சி. அம்பேத்கர் பெரிய ஞானி, மிகப்பெரிய அறிவாளி, அவர் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று ஜன சங்கத்தை வழிநடத்திய ஜானு பிரசாத் முகர்ஜி என்பவர் கூறினார். அதனை காந்தியும், காங்கிரசும் கம்யூனிசம் ஏற்கவில்லை. காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை அசிங்கம் தான் படித்தியது. ஆதரவு கொடுக்கவில்லை. தற்போது ஆண்டு கொண்டு இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் மோடி அரசு அம்பேத்கரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. தலித் மக்களில் பாதுகாவலனாக மோடியின் ஆட்சி உள்ளது. பட்டியலின மக்களுக்கு என்று பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. அதனை தலித் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். எனவே இளைஞர்கள் முதியவர்கள் நீங்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு வர வேண்டும். இங்குதான் மக்கள் பணி ஆற்ற முடியும். இங்குதான் ஜாதி வேறுபாடு கிடையாது. யார் வேண்டுமானாலும் புகழின் உச்சிக்கு செல்லலாம். திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை. சமஸ்கிருதம் வேண்டாம் என்று சொல்லுபவர்கள், சமஸ்கிருதத்தில் உள்ள திராவிடத்தை ஏன் வைத்துக்கொள்ள வேண்டும். திராவிடர் கழகம் என்று வீரமணி வைத்துக்கொண்டு அதில் சமஸ்கிருதத்தை சேர்த்து வைத்திருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்? தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பாரதப் பிரதமர் மோடி பேசும் இடங்களில் எல்லாம் தமிழ் ஒரு மூத்த மொழி என்று சொல்லி வருகிறார். எல்லா இடங்களிலும் திருக்குறளை பேசி வருகிறார். தமிழ் மீது அவருக்கு அவ்வளவு அக்கறை உண்டு. எனவே தமிழக மக்களுக்காகவும் பட்டியலின மக்களுக்கும் பாதுகாவலனாக விளங்கி வரும் மோடிஜியின் கரங்களை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் பட்டியலின அணி மாநில பொதுச்செயலாளர் N.L. நாகராஜ், பட்டியலின அணி மாநில பொருளாளர் PPGD. சங்கர், பட்டியலின அணி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராம. சிவசங்கர், பட்டியலின அணி மாநில செயற்குழு உறுப்பினர் திருச்சி வக்கீல் அரசு பிரபாகரன், ஆய் இந்திய தலித் ஆக்சன் கமிட்டியின் தேசிய பொதுச் செயலாளர் ராஜா, மாவட்ட செயலாளர் முரளிதரன், ஐ.டி.பிரிவு மாவட்ட தலைவர் தங்கதுரை, அறிவு சார் பிரிவு மாவட்ட தலைவர் அம்ரீத் அரசன், ஆல் இந்திய தலித் ஆக்சன் கமிட்டி மாநகர செயலாளர் முத்துக்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆசிரியர் தமிழ்செல்வன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
