தலைப்பு செய்திகள்
ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக முகவர் கோஷம்.
மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அப்போது 8-வது வார்டுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில், ஹிஜாப் அணிந்த பெண்கள் சிலர் வாக்களிக்க வந்தார்கள். அப்போது அங்கிருந்த பாஜக முகவர் கிரிராஜன், எதிர்ப்பு தெரிவித்தார்.
“முகத்தை காட்டாமல் வாக்களிக்க வந்தால் கள்ள ஓட்டுப் போட்டுவிடுவார்கள்” என்று அவர் குற்றம்சாட்டினார். அதற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள், “வாக்களிக்க வருபவர்களின் முகம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒத்துப்போகிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டியது தேர்தல் அலுவலர்களின் பொறுப்பு. அவர் எங்களுக்கு முகத்தைக் காட்டினால் போதும், உங்களுக்கு காட்டவேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தனர்.
சமாதானமாகாத பாஜக முகவர், இது கள்ள ஓட்டுப் போடுவதற்குச் சமம் என்றபடி எழுந்து நின்று கோஷமிட்டார். அவருக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அந்த முகவர், வாக்குச்சாவடிக்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்த முயன்றதால், அவரை வெளியேற்றுமாறு போலீஸாரிடம் வாக்குச்சாவடி அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்தச் சம்பவம் காரணமாக, சுமார் 30 நிமிடம் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தடைபட்டது. பாஜக முகவர் வெளியேற்றப்பட்டதும், வழக்கம் போல ஹிஜாப் அணிந்த பெண்கள் வாக்களித்தார்கள்.
இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், “இந்தியா மதச்சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களும் அவர்களது மத நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை உள்ளது. மத அடையாளங்களுடன் வாக்குப்பதிவு மையத்துக்கு வரக்கூடாது என்று தேர்தல் விதியில் எந்த நிபந்தனையும் இல்லை” என்றார்.